சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் பணிகளை அவர் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். "மாணவர்களைப் பார்க்கும் போது எனக்குள் ஒரு புதிய வைப் (Vibe) வந்துவிட்டது" எனத் தனது உரையைத் தொடங்கிய முதலமைச்சர், இந்தத் திட்டம் வெறும் பரிசுப் பொருள் அல்ல, தமிழினத்தின் எதிர்காலத்திற்கான முதலீடு எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். திராவிட இயக்கம் என்பது ஒரு அறிவியக்கம் என்று சுட்டிக்காட்டிய அவர், 25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் அவர்கள் ஐடி பூங்காக்களைக் கொண்டு வந்து தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டதை நினைவு கூர்ந்தார்.
“உலகம் உங்கள் கையில்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழாவில், மாணவர்கள் தங்களை நவீன உலகிற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தினார். “நூறல்ல ஆயிரம் அல்ல, 20 லட்சம் மடிக்கணினிகளை இளைஞர் சமுதாயத்திற்கு வழங்க உள்ளோம்; முதற்கட்டமாக இன்று 10 லட்சம் லேப்டாப்புகள் வழங்கப்படுகின்றன” என்றார். வெறும் டிகிரி மட்டும் போதும் என்று நினைக்காமல், தொழில்நுட்ப வளர்ச்சியை உணர்ந்து தங்களை எப்போதும் ‘அப்டேட்’ (Update) செய்து கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த லேப்டாப்பின் பயன்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், "இந்த மடிக்கணினியை வெறும் கேம்ஸ் விளையாடவோ அல்லது படம் பார்க்கவோ பயன்படுத்தப் போகிறீர்களா? இல்லை உங்கள் கேரியருக்கான லாஞ்ச் பேடாக (Launch Pad) மாற்றப் போகிறீர்களா?" என்ற ஆக்கப்பூர்வமான கேள்வியையும் முன்வைத்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்துப் பேசுகையில், "ஏஐ தொழில்நுட்பத்தால் ஒருபோதும் மனிதர்களின் இடத்தை நிரப்ப முடியாது" எனத் தெளிவுபடுத்தினார். “நான் எப்போதும் சொல்வது ஒன்றுதான்.. படிங்க.. படிங்க.. படிங்க! உங்களுக்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் உருவாக்கித் தருகிறோம்” என அவர் உருக்கமாகப் பேசியபோது அரங்கம் மாணவர்களின் கரவொலியால் அதிர்ந்தது.
இதையும் படிங்க: "ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதிரடி!" தமிழகத்தில் புதிய ஆலை தொடங்க வேதாந்தாவிற்கு அனுமதி?

“இந்தத் திட்டங்கள் மூலமாக நீங்களும் ஜெயித்து வாருங்கள், நாங்களும் ஜெயித்து வருகிறோம்” என முதலமைச்சர் முழக்கமிட்டது மாணவர்களிடையே பெரும் பாசிட்டிவ் எனர்ஜியை ஏற்படுத்தியது. இத்திட்டத்தின் Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. இதில் இன்டெல் i3 பிராசஸர், 8 GB RAM போன்ற சிறப்பம்சங்களுடன், மைக்ரோசாப்ட் ஆபீஸ் 365 மற்றும் ஏஐ மென்பொருளான Perplexity Pro-வின் 6 மாத சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழக அரசின் இந்தத் டிஜிட்டல் புரட்சி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களிடையே உள்ள தொழில்நுட்ப இடைவெளியைக் குறைக்கும் ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “பாஜக-அதிமுக கூட்டணி 2026-ல் ஆட்சியைப் பிடிக்கும்!” - 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' நிறைவு விழாவில் அமித்ஷா சூளுரை!