வியட்நாமை தளமாகக் கொண்ட உலகளாவிய மின்சார வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட், விங்குரூப் நிறுவனத்தின் துணை நிறுவனமாக 2017இல் தொடங்கப்பட்டு, மின்சார வாகனங்களை (EV) உற்பத்தி செய்யும் முதல் வியட்நாம் நிறுவனமாக உலக சந்தைகளில் புகழ்பெற்றுள்ளது.

ஹைஃபோங் நகரில் 828 ஏக்கர் பரப்பளவில் அமைந்த அதிநவீன தொழிற்சாலையில், 90% ஆட்டோமேஷன் மூலம் மின்சார கார்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் பேருந்துகளை உற்பத்தி செய்கிறது. 2022 முதல் முழுமையாக மின்சார வாகனங்களுக்கு மாறிய இந்நிறுவனம், 2024இல் வியட்நாமில் 97,000 வாகனங்களை விற்பனை செய்து, உள்நாட்டு சந்தையில் முன்னணி பெற்றுள்ளது, இதில் VF 3 மற்றும் VF 5 மாடல்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. வின்ஃபாஸ்ட் உலகளவில் விரிவாக்கத்தை மேற்கொண்டு, அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் தொழிற்சாலைகளை அமைக்கிறது.
இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் லாரி ஏற்றிக் கொலை? திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறி விட்டதா? கொந்தளிக்கும் இபிஎஸ்..!
வின்ஃபாஸ்ட் பிரபலமான நிறுவனங்களான பினின்ஃபரினா, சீமென்ஸ், பாஷ் உள்ளிட்டவற்றுடன் இணைந்து புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உயர்தர மின்சார வாகனங்களை உற்பத்தி செய்கிறது. 2024இல் $2 பில்லியன் நஷ்டம் ஏற்பட்ட போதிலும், உலகளாவிய விற்பனையை இரட்டிப்பாக்குவதற்கு இந்நிறுவனம் முயற்சிக்கிறது.
இந்தியாவில், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை 2025ல் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் அனுமதி வழங்கியது. தொடர்ந்து ஆலைக்கான பணிகள் இரவு பகல் என படுஜோராக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தற்போது இந்த ஆலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் ஜூலை 31ம் தேதி அன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீட்டில் இந்த ஆலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது.

முதற்கட்டமாக ரூ.1,120 கோடி செலவில் 114 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஆலை, ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதில் வி.எப்.6 மற்றும் வி.எப்.7 மாடல் கார்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலை இரண்டு பணிமனைகள், இரண்டு கிடங்குகள் மற்றும் கார் பரிசோதனை மையம் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 200 அரசு பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ மாணவர்கள் இங்கு பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3,500 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் ஆலையாக இது அமைந்துள்ளது, இது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும். இத்தொழிற்சாலை உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், மின்சார வாகன உற்பத்தியில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!