தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாள் வரும் 22-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அவரது பதவியேற்ற பின்னர் இது முதல் பிறந்தநாள் என்பதால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆலோசனை கூட்டம் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் (பனையூர்) இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “நம் கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் பிறந்தநாளை இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் நலன் சார்ந்த வகையில் கொண்டாட வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், அன்னதானம் ஏற்பாடு செய்தல் போன்றவற்றின் மூலம் அவரது பிறந்தநாளை நினைவுகூர வேண்டும்” என்றார். மேலும், முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: அரசுமுறை பயணத்தை தொடர்ந்து ஆன்மீக பயணம்: மூகாம்பிகை கோவிலுக்கு செல்கிறார் முதலமைச்சர் விஜய்..!

“அந்த உத்தரவுக்கு ஏற்ப, பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். முன்பெல்லாம் ‘சரி’ என்று சொல்லிவிட்டு, விழாவுக்கு வரும்போது பேனர்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளோம். அப்போது நிர்வாகிகளிடம் கேட்டால் ‘தொண்டர்கள் வைத்துவிட்டார்கள்’ என பதில் வருகிறது. இனி அப்படி நடைபெறக்கூடாது” என்று எச்சரித்தார்.
“முதலமைச்சர் விஜய்யின் உத்தரவுக்கிணங்க, த.வெ.க.வில் பேனர் கலாச்சாரம் என்பதே இல்லாமல் போக வேண்டும். எந்த நிகழ்ச்சியிலும் இது கடைபிடிக்கப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் முதலமைச்சரின் பிறந்தநாளை மக்கள் நலன் சார்ந்த வகையில் கொண்டாட முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள த.வெ.க. அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முதலமைச்சரின் பிறந்தநாளை சமூக நலன் நிறைந்த நாளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ உதவிகள், உணவு வழங்கல், கல்வி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஏராளமான மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் படிங்க: தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!