சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கல்வித் துறையின் தற்போதைய நிலை, ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாணவர்களின் நலன் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தங்களது கோரிக்கைகளை அமைச்சரிடம் மனுவாக வழங்கினர். குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் வாரத்திற்கு ஒரு நாளாவது சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையை கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சருடன் ஆலோசித்து, நிதி ஒதுக்கீடு, செயல்படுத்தும் சாத்தியக்கூறுகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகள் உள்ளிட்ட அம்சங்களை மதிப்பீடு செய்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: "Chicken Biryani சாப்பிடுவதை தடுக்க எந்த சட்டமும் இல்லை!" - உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து!

இதனுடன், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப் பணியில் அமர்த்துதல், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தகுதி மதிப்பெண்களை மறுஆய்வு செய்து குறைத்தல், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல், பழைய ஊதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் தற்போது பணியாற்றி வரும் 11,773 பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும் என்று சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில், சங்கங்கள் சமர்ப்பித்த அனைத்து கோரிக்கை மனுக்களும் பிரத்யேக மென்பொருள் மூலம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு வகைப்படுத்தப்படும் என்றும், ஒவ்வொரு கோரிக்கையின் நிலை மற்றும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு தொடர்ந்து தகவல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார்.
ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களின் நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நடைபெற்ற இந்தக் கூட்டம் கல்வித் துறையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. மேலும், ஆசிரியர் நலன் மற்றும் மாணவர் நலன் ஆகிய இரண்டையும் சமநிலையுடன் முன்னிறுத்தும் வகையில் அரசு விரைவில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கல்வித் துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: இன்ஸ்டாவில் மாஸ் காட்டும் விஜய்..!! ராகுலை பின்னுக்குத் தள்ளிய 1.87 கோடி ஃபாலோவர்ஸ்..!!