சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவரும் முதல்வருமான விஜய், ஆதரவு அளித்த கட்சிகளுடன் இணைந்து பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளார். இந்தக் கூட்டத்தில் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த கட்சிகளை அதிகாரப்பூர்வமாக கூட்டணிக் கட்சிகளாக அறிவிக்கவும், புதிய கூட்டணிக்கு பெயர் சூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க., பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இந்த ஆதரவுக் கட்சிகளுடன் இணைந்து வலுவான கூட்டணியை உருவாக்கும் நோக்கில் இந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
த.வெ.க. வட்டாரங்கள் தெரிவித்தபடி, இந்தக் கூட்டத்துக்கு ‘மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி’ என்று பெயர் சூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் விஜய், இந்த முக்கிய நிகழ்ச்சிக்கு சிறப்பான நாளை தேர்வு செய்ய தனது ஆஸ்தான ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாகவே இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்த முதலில் திட்டமிட்டிருந்த நிலையில், கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் மின் தடை பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: விஜய் முதல்வராக கூடாது என உதயநிதி டீல் பேசினார்! ரகசிய டீலை உடைத்த மாணிக்கம் தாகூர்!

இந்தப் பொதுக்கூட்டம் த.வெ.க.வின் மிக முக்கிய அரசியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஆட்சியமைத்த பிறகு முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் முதல் பெரிய பொதுக்கூட்டம் என்பதால், த.வெ.க.வினர் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, எதிர்கால அரசியல் கூட்டணியின் திசையைத் தெளிவுபடுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
த.வெ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக அனைத்து ஆதரவுக் கட்சிகளும் ஒரே மேடையில் ஒன்றிணையும் இந்த நிகழ்வு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!