தமிழகத்தில் பாலியல் குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்கும் வகையில், வண்ணக் குறியீட்டுடன் கூடிய புதிய வகைப்பாட்டு முறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
குற்றங்களின் தீவிரம் மற்றும் மீண்டும் குற்றம் செய்யும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், குற்றவாளிகள் எட்டு வண்ணப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், காவல்துறையின் மனிதவள மற்றும் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்தவும் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, சிவப்பு நிறப் பிரிவில், மிகவும் ஆபத்தான பாலியல் குற்றவாளிகள், தொடர் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் மற்றும் மீண்டும் மீண்டும் போக்சோ வழக்குகளில் ஈடுபடுபவர்கள் இடம்பெறுவர்.
இதையும் படிங்க: இது குதிரை பேரமா கழுதை பேரமா..? - சொல்லக்கூடாத நெம்பரை சொல்லி திமுகவை வெளுத்து வாங்கிய துரைவைகோ...!
ஆரஞ்சு நிறப் பிரிவில், மீண்டும் பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் தொல்லைகளில் ஈடுபடுபவர்கள், பின்தொடர்ந்து தொந்தரவு செய்பவர்கள் (Stalkers), சைபர் கண்காணிப்பில் உள்ளவர்கள் ஆகியோர் கண்காணிக்கப்படுவார்கள்.
நீல நிறப் பிரிவில், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை இணையம் மூலம் ஏமாற்றி சுரண்டும் சைபர் குற்றவாளிகள், பாலியல் மிரட்டல் மூலம் பணம் பறிப்பவர்கள் (Sextortionists), இணையத்தில் தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு செய்பவர்கள் (Cyber Stalkers), குழந்தைகள் தொடர்பான பாலியல் ஆபாச உள்ளடக்கங்களை பயன்படுத்துதல் அல்லது பரப்புதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரும் இடம்பெறுகின்றனர்.
கருப்பு நிறப் பிரிவில், மனிதக் கடத்தல் கும்பல்கள் மற்றும் மாநில, சர்வதேச அளவில் செயல்படும் பாலியல் துஷ்பிரயோக வலையமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
வெள்ளி நிறப் பிரிவில், 18 வயதுக்கு உட்பட்ட சிறார் பாலியல் குற்றவாளிகள் வகைப்படுத்தப்படுகின்றனர்.
ஊதா நிறப் பிரிவில், கிரிண்டர் (Grindr) உள்ளிட்ட ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலம் ஓரினச்சேர்க்கை தொடர்பான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.
இளஞ்சிவப்பு நிறப் பிரிவில், பெண்களை கேலி செய்து தொந்தரவு செய்பவர்கள் மற்றும் ரகசியமாக படம் அல்லது வீடியோ எடுக்கும் குற்றவாளிகள் இடம்பெறுகின்றனர்.
பச்சை நிறப் பிரிவில், தனித்த சம்பவங்களாக நிகழ்ந்த அல்லது மீண்டும் நிகழ வாய்ப்பு குறைவாக உள்ள மிதமான ஆபத்துடைய பாலியல் குற்றங்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான சில பாலியல் குற்ற வழக்குகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதுடன், காவல்துறையின் மனிதவளத்தை துல்லியமாக பயன்படுத்தி குற்றவாளிகளை திறம்பட கண்காணிக்கும் நோக்கில் இந்த நவீன வகைப்பாட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விஜயெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது... தளபதி இமேஜை தவிடுபொடியாக்கும் தவெக நிர்வாகிகள்... அரசு பள்ளிக்குள் நுழைந்து அட்ராசிட்டி...!