கோவை: மதுக்கரை அருகே திருமலையாம்பாளையத்தில் வசிக்கும் தனியார் கல்லூரி ஊழியர் மோனிகா (32) என்பவரை அவரது முன்னாள் வாடகைதாரர்கள் கடத்தி, ரூ.5 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள நகைகளை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஸ்தூரி ரங்கநாதன் என்பவரின் மனைவியான மோனிகா, திருமலையாம்பாளையத்தில் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் சென்னை திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (42) மற்றும் அவரது மனைவி ஷோபா (38) ஆகியோர் வாடகைக்கு தங்கியிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு அவர்கள் வீட்டை காலி செய்து சொந்த ஊருக்குச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று விஸ்வநாதன் தம்பதி கோவை வந்தனர். மோனிகாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, “கோவில் பிரசாதம் கொண்டு வந்துள்ளோம். கல்லூரிக்கு வெளியே வந்து நில்லுங்கள், நாங்கள் வந்து தருகிறோம்” என்று ஏமாற்றி அழைத்தனர். நம்பிக்கையின் அடிப்படையில் மோனிகா கல்லூரிக்கு வெளியே காத்திருந்தார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு போன ஆபாச படங்கள்..!! பதறிப்போன பெற்றோர்! சில்மிஷ வாத்தியாருக்கு சிறை!
அப்போது காரில் வந்த விஸ்வநாதன் மற்றும் ஷோபா, பிரசாதம் கொடுப்பது போல் அருகில் வந்து திடீரென மோனிகாவை காரில் ஏற்றிக் கடத்திச் சென்றனர். மோனிகா அலற முயன்றபோது, “சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம்” என மிரட்டினர். பின்னர் அவரது கழுத்தில் இருந்த தாலிக்கொடி, செயின், மோதிரம் உள்ளிட்ட நகைகளை பலவந்தமாக பறித்துக்கொண்டனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் மோனிகாவை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
மோனிகா உடனடியாக க.க.சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். எட்டிமடை மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கு உரிய காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் விஸ்வநாதன்-ஷோபா தம்பதி இருந்தனர். விசாரணையில் அவர்கள் மோனிகாவை கடத்தி நகை பறித்தது உறுதியானது. மேலும் கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
போலீசார் உடனடியாக இருவரையும் கைது செய்து, பறிக்கப்பட்ட நகைகளை முழுமையாக மீட்டனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்பிக்கையை துரோகம் செய்து கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றிருப்பது பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இத்தகைய ஏமாற்று சம்பவங்களில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: காரில் வைத்து மனைவியின் கால்களை வெட்டிய கொடூர கணவன்!! குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரம்!