சென்னையை சேர்ந்து ஹோமியோபதி மருத்துவ தம்பதியிடம் 10 லட்சம் ரூபாய் மற்றும் 26 சவரன் நகையை மோசடி செய்ததாக திமுக எம்பி திருச்சி சிவாவின் மகள் மற்றும் மருமகனுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அயனாவரத்தை சேர்ந்த வீனா விலாசினி என்பவர் அளித்த புகாரில் திருச்சி சிவாவின் மகளான காயத்ரியும் மருமகன் முத்துக்குமாரும் கடந்த 10 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்ததாக கூறியிருக்கிறார். அப்போது காயத்ரி மற்றும் அவரது கணவரிடம் கொடுத்த 26 சவரன் நகை மற்றும் 10 லட்சத்தை திருப்பி தரவில்லை என்றும் அதனை கேட்டால் தங்களை மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில், அவசரத் தேவையை காரணம் காட்டி முத்துகுமார் ரூ. 10 லட்சம் கடனாக பெற்றதாகவும், பின்னர் 2023ஆம் ஆண்டு காயத்ரி சிவா தனது குடும்பத் தேவைக்காக தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெற வேண்டியிருப்பதாக கூறி மொத்தம் 50 சவரன்தங்க நகைகளை பெற்றதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதில் பின்னர் 24 சவரன் நகை மட்டும் திருப்பி வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள 26 சவரன் நகை மற்றும் ரூ. 10 லட்சம் பணம் இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய மயிலாடுதுறை கோரம்... காதல் ஜோடி மரணத்தில் அதிரடி திருப்பம்...!
நீண்ட காலமாக பணமும் நகையும் திருப்பித் தரப்படாததால் பலமுறை கேட்டதாகவும், பின்னர் காயத்ரி சிவா மற்றும் முத்துகுமார் இருவரும் பணம் மற்றும் நகையை திருப்பித் தர முடியாது என்று கூறியதோடு மிரட்டல் விடுத்ததாகவும் மருத்துவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட தொகை மற்றும் நகையை மீட்டுத் தருவதுடன், குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவர் வினா விலாசினி அளித்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். புகாரில் கூறப்பட்டுள்ள நிதி பரிமாற்றங்கள், நகை ஒப்படைப்பு தொடர்பான ஆவணங்கள் மற்றும் இரு தரப்பினரின் விளக்கங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறை எந்த இறுதி முடிவையும் அறிவிக்கவில்லை. வழக்கின் உண்மை நிலை விசாரணைக்குப் பிறகே உறுதி செய்யப்படும்.
சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிராக நிதி மோசடி தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த புகாரும் அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், ஒரு புகார் அளிக்கப்பட்டிருப்பது மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக பொருள் அல்ல. காவல்துறையின் விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகளே இறுதி உண்மையை வெளிக்கொண்டு வரும்.
இதையும் படிங்க: திமுக வழியில் தவெக எடுத்த அதிரடி முடிவு... டாஸ்மாக் பார்கள் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...!