தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வெளியிட்ட கருத்துக்களுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி (TNCC) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "உண்மையான காங்கிரஸ் வேறு எங்கோ உள்ளது" என்ற விஜய்யின் கருத்தைத் திரும்பப் பெற்று அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் செ. ராம்மோகன் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் பரப்புரையின் போது நடிகர் விஜய் வெளியிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் பேரியக்கத்தைப் பணம் அல்லது அதிகாரத்தின் மூலம் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய்யின் தவெக கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி வைக்கத் திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விஜய்க்கு என்ன கொள்கை என்றே புரியாத நிலையில், அந்த முயற்சிகள் தொடக்கத்திலேயே நிராகரிக்கப்பட்டன. காங்கிரஸில் ஆள்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட விஜய்யிடம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் தான் சிக்கினார்கள். ஒட்டுமொத்த காங்கிரஸும் திமுக கூட்டணியிலேயே உறுதியாக உள்ளது.
இதையும் படிங்க: கொளத்தூரில் 'டூப்' விஜய்! தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வினோத பிரசாரத்தால் பரபரப்பு!
பாஜகவை கொள்கை எதிரி என்று அறிவித்த விஜய், கரூர் சம்பவத்திற்குப் பிறகு அவர்களை எதிர்க்கத் துணிவில்லாமல் இருப்பதாகக் காங்கிரஸ் சாடியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி கடந்த 20 ஆண்டுகளாக ஒரு கொள்கை கூட்டணியாகச் செயல்பட்டு வருகிறது. தவெக-வோடு கூட்டணி வைக்க எவ்வித வாய்ப்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உண்மையான காங்கிரஸ் வேறு எங்கோ உள்ளது எனக் கூறுவது அரசியல் நாகரீகமற்றது. காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சியைச் சீண்டிப் பார்க்கும் வேலையை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனச் செ. ராம்மோகன் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக இருப்பதாகவும், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் அவதூறு கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? அருண்குமார் மாயமானதாக டி.ஜி.பி-யிடம் பரபரப்பு புகார்!