திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாகப் பாடப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதோடு, தமிழ்நாட்டில் அரசின் சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்படுவதை உறுதி செய்யச் சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. மாநில அரசின் வழிகாட்டுதல்களின்படி, அரசு மற்றும் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள நிலையில், இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுப் பாடப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிப்பதோடு கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் அடையாளத்தையும் மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து அரசாணையையும் புறந்தள்ளும் இந்தச் செயலில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ஆளுநர் பங்கேற்கும் விழாவில் நெல்லை பல்கலைக்கழகத்தின் புதிய நடைமுறை!
மேலும், தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் - அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் கல்வி மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ் தாய் வாழ்த்துக்கு இந்த நிலையா..? CM விஜய் மௌனமாக இருப்பது ஏன்..? விளாசிய வேல்முருகன்..!!