தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'முரசு' புயல் காரணமாகத் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அதிதீவிர கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் ஆ. சிவஞானம் அவர்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில் புயல் மற்றும் மழைப் பொழிவு தொடர்பான விரிவான எச்சரிக்கை விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இன்று நவம்பர் 1-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பலத்த கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் உருவாகும் ‘முரசு’ புயல்..! அடுத்த 24 மணி நேரத்தில் சம்பவம் இருக்கு..! வானிலை மையம் எச்சரிக்கை..!
தொடர்ந்து நாளை நவம்பர் 2-ஆம் தேதி நிலவரப்படி, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை முதல் அதிதீவிர கனமழை (200 மி.மீ-க்கு மேல்) பதிவாகக்கூடும் என்றும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 3-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் மற்றும் தொடர் கனமழை எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட 7 மாவட்ட ஆட்சியர்களும் பேரிடர்களைக் கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைத் (SOP) தீவிரமாகப் பின்பற்றி, மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரத்தையும் முழு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, தாழ்வான பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், மழை வெள்ளத்தால் ஏற்படும் எந்தவொரு அவசரச் சூழலையும் எதிர்கொள்ளத் தேவையான நிவாரண முகாம்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏதேனும் எதிர்பாராத பாதிப்புகளோ அல்லது அசம்பாவிதங்களோ ஏற்பட்டால், அது குறித்த தகவல்களை உடனடியாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்திற்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒருவழியாக கரையை கடந்தது அர்னாப் புயல்..! வெளுத்துவிட்ட மழை..!! வானிலை அப்டேட்..!!