மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேகதாது அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கும்போது தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், மற்றும் ஒழுங்காற்று குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை வழங்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு என்பதை தெளிவுபடுத்துவதாகவும், மேகதாது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுகளும் முடித்து வைக்கப்படுவதாகவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. மேலும் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது என்று கூறினார். அப்படி இருக்க, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இன்றைய தினம் உச்சநீதிமன்ற அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம்... அள்ளாடும் மக்கள்... விளாசிய EPS...!
தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்காமால், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாக கூறினார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரியில் உள்ள நம் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் என்று ஏற்கனவே அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும், மேகதாது அணை விவகாரத்தை காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடகம் கோரியபோதே, திமுக அரசு வாய்மூடி மௌனியாக இருந்ததையும் தான் கண்டித்து இருப்பதாக குறிப்பிட்டார். தங்களுடைய குடும்பத் தொழிலை காப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வருவதற்கு உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் தமிழகத்தின் உரிமையை மீட்கவும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவின் கொள்கை தாங்கி EPS... அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்...!