தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பமாக, தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் (தேமுதிக) முதல்முறையாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த அதிரடி அரசியல் நகர்வு குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிகவின் வருகை கூட்டணிக்குக் கூடுதல் வலிமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஏற்கனவே வலுவாக உள்ளது. தற்போது விஜயகாந்த் அவர்களின் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எங்களுடன் இணைந்திருப்பது கூட்டணிக்கு மிகப் பெரிய பலத்தைச் சேர்த்துள்ளது. ஒரு வலிமையான இயக்கம் நம்முடைய தலைவரைத் தேடி வந்து கைகோர்ப்பது, இக்கூட்டணி மேலும் வளர்ந்து வருவதையே காட்டுகிறது எனத் தெரிவித்தார்.

தேமுதிக வருகை குறித்து மக்களிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், நிச்சயமாக வருகின்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் இதை நிரூபித்துக் காட்டுவார்கள். தேமுதிகவின் வருகை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் என்றார்.
இதையும் படிங்க: திமுக - தேமுதிக கூட்டணி மக்களின் மனநிலைக்கு எதிரானது திருச்சியில் ஜி.கே.வாசன் கடும் விமர்சனம்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) நிலை குறித்துப் பேசிய அவர், அங்கே என்ன நடக்கிறது என்பதை இன்னும் 50 நாட்கள் பொறுமையாக இருந்து பாருங்கள். தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுத்து, எங்களது கூட்டணியின் பலத்தை நிரூபிப்பார்கள் என நம்பிக்கையுடன் தெரிவித்தார். திமுக தலைவரைத் தேடி முக்கிய இயக்கங்கள் வருவது, திராவிட மாடல் ஆட்சியின் மீதும், முதல்வரின் தலைமையின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையே பிரதிபலிக்கிறது என அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
விஜயகாந்த் அவர்களின் மறைவிற்குப் பிறகு தேமுதிக எடுத்துள்ள இந்த முதல் தேர்தல் முடிவு, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்த "50 நாட்கள் கெடு" அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: அரசியலில் நடக்கும் அதிசயம்..!! 10 வருஷத்துக்கு முன் கலைஞர் சொன்ன அந்த வார்த்தை..!! இப்போது சாத்தியமானது எப்படி..??