தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம். இந்தத் திட்டம் முதலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக வழங்கும் நோக்கத்தில் 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ரேஷன் பொருட்களை வீட்டுக்கே கொண்டு சேர்க்கும் வசதியை இது வழங்கியது.
இந்த ஆண்டு 2026 பொங்கல் பண்டிகைக்கு இத்திட்டம் இன்னும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும், தலா ரூ.3,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. இதோடு விலையில்லா வேட்டி-சேலை திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு இந்த பரிசுத் தொகுப்பும் ரொக்கமும் வீடுகளுக்கே நேரடியாக சென்று கொடுக்கப்படும் என்று தாயுமானவர் திட்டத்தின் கீழ் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் தள்ளாடி கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. நடக்கவே முடியாமல் தள்ளாடிக் கொண்டு கரும்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை அந்த மூதாட்டி வாங்கி செல்கிறார். வீடுகளுக்கே வந்து கொடுக்கவில்லையா என்று கேட்டதற்கு நான் என்ன செய்ய என்று தழுதழுத்த குரலில் பேசியுள்ளார். பொங்கல் பரிசுத் தொகப்பில் வேட்டி சேலை தரவில்லை என்றும் நன்மை செய்கிறவர்கள் யாரும் இல்ல.., தீமை தான் செய்றாங்க என அந்த மூதாட்டி கூறினார்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் தேர்தல் களம்.. மதுராந்தகத்தில் மோடி பொதுக்கூட்டம்: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்!
பிறகு அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக கூறியுள்ளனர். இந்த வீடியோவை சுட்டிக்காட்டி உள்ள அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்ற தாயுமானவர் திட்டம் என்ன ஆச்சு என்று தெரியவில்லை என்று கூறியுள்ளது. இந்த போகி பண்டிகையில் தீய சக்தி திமுகவை தூக்கி எறிந்து அதிமுகவின் நல்லதோர் மக்களாட்சியை மீண்டும் கொண்டு வருவோம் எனவும் அதிமுக உறுதிப்பட தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: EPS உண்மை பேசின நாளே இல்ல... பூங்கா பெயர் மாற்றம் குறித்த எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி..!