உத்தமபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் மனைவியுடன் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 42 வயதான இவர், உத்தமபாளையம் பேரூராட்சி 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார். அவருடைய மனைவி சுகன்யா (35). இவர், உத்தமபாளையம் அருகே ஊஞ்சாம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு கவுதம் என்ற 21 வயது மகனும், பூஜா என்ற 19 வயது மகளும் உள்ளனர். இதில், பூஜா உத்தமபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வேலை விஷயமாக மணிகண்டன், தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கம்பம் நகருக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு உத்தமபாளையம் நோக்கி கணவனும் மனைவியும் அந்த வாகனத்திலேயே சென்று உள்ளனர். அப்போது உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி பழைய சினிமா தியேட்டர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் கம்பத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் மோதியது.
இதையும் படிங்க: என் வாக்குச்சாவடி... வெற்றி வாக்குச்சாவடி...! பரப்புரையை தொடங்கி வைத்த முதல்வர்...!
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த மணிகண்டனும், சுகன்யாவும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில், சுகன்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய மணிகண்டன் முதலில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு முதலுதவி முடிந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்னி ஓட்டுநரை கைது செய்தனர். இருசக்கர வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பேரூராட்சி மன்ற கவுன்சிலரும், அவரது மனைவியும் பலியான சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெளியானது பொங்கல் பரிசு தொகுப்பு விவரம்!! ஜன.,3 முதல் உங்கள் கைகளில்! லிஸ்ட் இதோ?!