திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்றில் உள்ள முருகன் கோவிலை அகற்ற முயன்ற அதிகாரிகளுக்கு எதிராக இந்து முன்னணி உறுப்பினர்களும் பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பாக கோவில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, சிலைகளை அகற்ற அதிகாரிகள் சென்றனர். இதைத் தடுக்க முயன்ற போராட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்தார். அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட சுமார் 200 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. கோவில் இடிப்பு முயற்சியைக் கண்டித்து தாராபுரம் ரோட்டில் இந்து முன்னணி உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: திருச்செந்துார் கோயிலுக்கு ஆபத்து! கடல் அரிப்புக்குள்ளாகும் அபாயம்! விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

இந்தச் சம்பவத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வன்மையாகக் கண்டித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "கோவிலைக் காக்க வந்தோரைத் தாக்கும் திமுக அரசு தூக்கியெறியப்படும். ராக்கியாபட்டி பகுதியில் உள்ள செல்வ முத்துக்குமாரசாமி திருக்கோவிலை இடிக்க முயன்றதோடு, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீதும் பாஜக நிர்வாகிகள் மீதும் தாக்குதல் நடத்தியது வன்மையான கண்டனத்திற்குரியது" என்று கூறியுள்ளார்.
மேலும், மதச்சார்பின்மை போர்வையில் ஹிந்து பக்தர்களைத் தாக்குவது, சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவது போன்ற திமுக அரசின் ஹிந்து விரோத போக்கை அவர் சாடினார். இத்தகைய செயல்களால் திமுக அரசு மண்ணைக் கவ்வும் என்றும் நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிங்க: கடவுள் முருகனையே கீண்டல் பண்ணுறீங்களா? வழக்கறிஞர் ஜோதி மன்னிப்பு கேட்கணும்! இந்து அமைப்புகள் போர்க்கொடி!