தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் குறித்து விமர்சித்து பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்டிருந்தார். அந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், முதல்வர் விஜயை விமர்சித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இன்று அதிகாலை, விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார், அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து முதல்வரை விமர்சித்து பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சமூக வலைதளங்களில் அரசை விமர்சிக்கும் பதிவுகள் தொடர்பாகவும் காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பது விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சுகர் மாத்திரைக்கு ‘நோ’... விஜய்யை விமர்சித்த மார்க்கண்டேயனுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த போலீஸ்...!
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட MLA மார்க்கண்டேயனுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்காக ஆதரவாளர்கள் சுகர் மாத்திரை கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் அவர்களை போலீசார் திருப்பி அனுப்பியதாக கூறப்பட்டது. மாத்திரை கூட கொடுக்க அனுமதிக்கவில்லை என்று கூறி போலீசார் நடவடிக்கையை கண்டித்துள்ளனர். ஏற்கெனவே திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் திமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர். அதற்குள் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் திமுக-காங்கிரஸ் நேரடி மோதல்? ஆகஸ்டில் ‘அணுகுண்டு’ வெடிக்கும் என பிரவீன் சக்கரவர்த்தி பரபரப்பு!