தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விவகாரத்தில், கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்துத் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கோவில்பட்டி எம்.எல்.ஏ கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.
முதலமைச்சரை நேரடியாக மிரட்டும் தொனியில் அவர் பேசியதாகக் கூறி, தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணியன் காவல்துறையிடம் முறைப்படி புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், மார்க்கண்டேயன் மீது மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு!

இன்று காலை மார்க்கண்டேயனின் இல்லத்திற்குச் சென்ற காவல்துறையினர், அவரைத் தடிப்பாறக் கைது செய்ய வந்திருப்பதாகத் தெரிவித்தனர். அதற்கு, சபாநாயகரின் அனுமதி இல்லாமல் ஒரு சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்ய முடியாது என மார்க்கண்டேயன் போலீசாரிடம் காரசாரமாக வாதிட்டார்.
இதற்கிடையே எம்.எல்.ஏ கைது செய்யப்பட உள்ள தகவல் பரவியதும், அவரது வீட்டின் முன்பாக ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு போலீசாருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். எனினும், கூடுதல் பாதுகாப்பைப் பலப்படுத்திய போலீசார், மார்க்கண்டேயனைப் பாதுகாப்புடன் காவல் வாகனத்தில் ஏற்றித் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனிடம் சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரைக் காண்பதற்காக எஸ்பி அலுவலகம் வந்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்குப் போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் காவல்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மார்க்கண்டேயன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுமார் ஒரு மணி நேரப் பரிசோதனைக்குப் பிறகு, பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்ற நடுவர் சுமதி முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் கண்ணனும், திமுக தரப்பில் ஜான் அலெக்சாண்டர், பாபு, செல்வகுமார் ஆகிய வழக்கறிஞர்களும் ஆஜராகித் தங்களது காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுமதி, தமிழக முதல்வர் குறித்து மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டிற்காக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், 14 நாட்கள் கழித்து வருகிற 03.08.2026 அன்று அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி பாணியை கையில் எடுத்த விஜய் ’சர்கார்’...சேத்துபட்டில் துணியை வைத்து தவெக அரசு செய்த காரியம்...!