தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள முத்தையன்செட்டிபட்டியில் இன்று நடந்த கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக அ.ம.மு.க. ஒன்றியப் பொறுப்பில் உள்ள பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவக்குமார் இருவரும் சேர்ந்து, பிரதீப்பின் மனைவி நிகிலா மற்றும் அவரது மைத்துனர் விவேக் ஆகியோரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
தேவாரம் அருகே உள்ள முத்தையன்செட்டிபட்டியைச் சேர்ந்த பிரதீப் (27), அவரது தந்தை சிவக்குமார் இருவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஒன்றியப் பொறுப்பில் உள்ளனர். பிரதீப் எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபட்டு, பல வழக்குகளில் சிக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன் சின்னமனூரைச் சேர்ந்த நிகிலாவைத் திருமணம் செய்த பிரதீப்புக்கும், நிகிலாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
பிரதீப்பின் கொடுமை காரணமாக ஒரு மாதமாகப் பிரிந்து தாயார் வீட்டில் வசித்துவந்த நிகிலாவை, உறவினர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்துள்ளனர். ஆனால், ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் ஏற்பட்ட சண்டையில் பிரதீப், நிகிலாவைச் சரமாரியாகத் தாக்கியதாகவும், படுகாயமடைந்த நிகிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, பிரதீப் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவதாகப் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரூர் விபத்தில் உண்மை வெளிவருமா? மருத்துவர், ஆட்சியரிடம் 2 மணி நேரம் சிபிஐ விசாரணை!
இந்த நிலையில், இன்று இந்த விவகாரம் குறித்து பஞ்சாயத்துப் பேசி முடித்துவிட்டு, தன்னுடைய பொருட்களை எடுத்துச் செல்வதற்காக நிகிலா அவரது அண்ணன் விவேக் (33) மற்றும் 10க்கும் மேற்பட்ட உறவினர்களை அழைத்துக்கொண்டு முத்தையன்செட்டிபட்டியில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கே பிரதீப், சிவக்குமார் மற்றும் நிகிலாவின் குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில், ஆத்திரமடைந்த பிரதீப், கத்தியால் விவேக்கைச் சரமாரியாகக் குத்தியதில் விவேக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைப் பார்த்த நிகிலா மயங்கி விழுந்துள்ளார். அப்போது, மயங்கி விழுந்த நிகிலாவை சிவக்குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொடூரச் செயலுக்குப் பின், பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவக்குமார் இருவரும் தலைமறைவாகி விட்டார்கள்.
போடி தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் நிகிலா மற்றும் அவரது அண்ணன் விவேக்கின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்நேக பிரியா அவர்கள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பிரதீப் மீது ஏற்கனவே 7க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது. கொலை செய்யப்பட்ட நிகிலா வழக்கறிஞருக்குப் படித்து முடித்துள்ளார். விவேக் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தவர்; அவருக்குத் திருமணமாகி ஒரு மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தப்பி ஓடிய பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவக்குமாரைத் தீவிரமாகத் தேட DSP சுனில் தலைமையிலான போலீஸார் மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழு வருகை: பொதுமக்கள் மனு அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!