ஜூலை 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தைத் தொடங்க உள்ளார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்குகிறது. ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.

இதில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மற்றும் பேராவூரணி தொகுதிகள் அடங்குகின்றன. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் யார்? தேர்தலுக்கு பின்புதான் தெரியும்... டிடிவி தினகரன் விளக்கம்!!

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். இது எனது தனிப்பட்ட பயணம் அல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடும் மாற்றத்தை நோக்கி நடக்கும் வெற்றி பயணம் என்று கூறியுள்ளார். உங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் காது கொடுத்து கேட்கும் சேவகன்-ஆக இருப்பேன் என்றும் சில விஷமிகளின் சுயநலத்தால் மாலுமியை இழந்த கப்பல் போல் தமிழகம் தள்ளாடுகிறது எனவும் தெரிவித்தார்.

அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்த இந்த அரசை அகற்றுவது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, இது எனது தனிப்பட்ட பயணம் அல்ல.,ஆட்சி மாற்றத்தையும் சமூக மாற்றத்தையும் விரும்பும் ஒவ்வொரு தமிழரின் சுற்றுப்பயணம் என்றும் தமிழ்நாடு மாற்றத்தை நோக்கி நடக்கும் வெற்றி பயணம் எனவும் கூறியுள்ளார்.

எளியவர்கள் உயிரை துச்சமாக நினைக்கும் போக்கு ஆட்சியாளர் மனதில் நிறைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். முடியாத கொடுமைக்கு முடிவு கட்டுவோம்., விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்., தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரட்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாவம்யா ஸ்டாலின்... பார்க்கவே பரிதாபமா இருக்கு... திமுகவை பார்த்து உச்சுக்கொட்டிய எடப்பாடி...!