2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொது மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, பலதரப்பு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் தேர்தலுக்கான வாக்குறுதிகளையும் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தின் போது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்ததால் ஆத்திரமடைந்த இபிஎஸ், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாகப் போகிற நிலைமை வரும் என்று பழனிச்சாமி பேசி உள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எப்போது தனது பிரச்சாரம் நடந்தாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாகவும் கூறியிருந்தார்.

ஆளுங்கட்சியை கடுமையாக சாடி பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அல்லது அவரது கட்சி சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும், சமூக ஊடகப் பயனர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “அவரு வர்ல, உங்களுக்கு எதுவுமே இல்ல” ... டிடிவி-க்கு ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்ட பாஜக தலைமை... இபிஎஸுக்கு எதிராக அசைன்மெண்ட்...!
இதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த செயல் அநாகரிகமானது என்று கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் சேவையை போல வேறு எங்கும் இல்லை என்று பலரும் பாராட்டும் வகையில் உயிர்காக்கும் சேவையாக செயல்பட்டு வருவதாகவும் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு எடப்பாடி பழனிச்சாமி மிரட்டல் விடுத்திருப்பது கண்டனத்திற்கு உரியது என்றும் தெரிவித்தார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆம்புலன்ஸ் செல்வது எதையும் ஞாபகப்படுத்துகிறது போல என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: மக்கள் உணர்வ மதிக்கவே மாட்டீங்களா? கல்லறை திருநாளில் எக்ஸாம்! இபிஎஸ் கண்டனம்..!