அதிமுக - பாஜக இடையே கூட்டணி பிளவு பட்டிருந்த நிலையில் தமிழகத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்த போது மீண்டும் தங்களது கூட்டணியை உறுதிப்படுத்தினார். எனவே 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுகவும் பாஜகவும் இணைந்தே சந்திக்கின்றன. எனவே இரு கட்சிகளும் தொடர்ந்து பல வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி, பூத் கமிட்டி அமைப்பது, துண்டு பிரசுரங்கள் வழங்குவது, கட்சியை பலப்படுத்துவது, நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்குவது என தேர்தல் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தைத் தொடங்கி உள்ளார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளது. ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. இதில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மற்றும் பேராவூரணி தொகுதிகள் அடங்குகின்றன. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக்கு கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அவர் எங்கள புகழ்ந்தா பேசுவாரு? சும்மா குறை சொல்லிட்டே இருப்பாரு.. இபிஎஸ்-ஐ வெளுத்த துரைமுருகன்..!

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயண தொடக்க நிகழ்வில் தான் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார். தொலைபேசி மூலம் அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தானும் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க இருப்பதாகவும் கூறி இருந்தார். மேலும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜக மாவட்ட நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்வார்கள் தெரிவித்தார்.

இந்த நிலையில், கோவையில் தொடங்கி உள்ள சுற்றுப்பயண நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துக் கொண்டார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி ரோடு ஷோ உற்சாகமாக தொடங்கியது.
இதையும் படிங்க: வஞ்சிக்கும் திமுக.. 4 முறை மின்கட்டண உயர்வு! அதிமுக ஆட்சி அமைந்ததும்? வாக்குறுதிகளை கொடுத்த இபிஎஸ்..!