அ.தி.மு.க. நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் 1977 முதல் 1987 வரை 11 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்தார். மூன்று முறை தொடர்ந்து தேர்தலில் வென்று முதல்வராக இருந்தார். மக்களால் எம்.ஜி.ஆர் என்றும் புரட்சி தலைவர் என்றும் போற்றப்பட்ட இவர், திரைத்துறையிலும், அரசியலிலும் கொடிகட்டி பறந்தவர் ஆவார். இவர் முதலமைச்சராக இருந்தபோது அவரது நம்பகமான உதவியாளராகவும், நெருங்கிய நண்பராகவும் மகாலிங்கம் என்பவர் செயல்பட்டு வந்தார். தனது 20ஆவது வயதிலேயே எம்.ஜி.ஆரிடம் சேர்ந்த மகாலிங்கம், எம்.ஜி.ஆரின் அரசியல் மற்றும் திரைத்துறை பயணத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

இதனிடையே 73 வயதான மகாலிங்கம் சென்னை ஆர்ஏ புரத்தில் வசித்து வந்தார். அண்மைக் காலமாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்த மகாலிங்கம் தனது குடும்பம் வறுமையிலிருப்பதாகவும் யாரும் உதவி செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: அதிமுக விசுவாசி அவர்! MLA அமுல் கந்தசாமி மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

இந்நிலையில், மகாலிங்கம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மகாலிங்கத்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், நம் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருப்பவருமான 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் தனி உதவியாளராக பணியாற்றிய திரு. மகாலிங்கம் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் திரு. மகாலிங்கம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பல விருதுகள்.. அப்துல் கலாமிடம் இருந்து பாராட்டு.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மறைவு..!