மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு துறை இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, அமைச்சகங்களுக்கு இடையேயான விளக்கக் கூட்டத்தில் முக்கிய தகவல்களைப் பகிர்ந்தார். நாடு முழுவதும் எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் சீராகவும், போதுமான அளவிலும் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தியா பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் தற்போது 100 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட திறனுடன் இயங்கி வருகின்றன. சுத்திகரிப்பு நிலையங்களில் கச்சா எண்ணெய் போதுமான அளவு இருப்பு உள்ளது. விநியோக அமைப்பு தொடர்ந்து சீராக பராமரிக்கப்படுவதால், எரிபொருள் நிலையங்களில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

எல்.பி.ஜி. (சமையல் எரிவாயு) தொடர்பாக சில சவால்கள் இருப்பதை ஒப்புக்கொண்ட சுஜாதா சர்மா, இது தொடர்பான கவலையை அரசு உணர்ந்துள்ளது என்றார். இருப்பினும், நாடு முழுவதும் உள்ள சுமார் 25,000 எல்.பி.ஜி. விநியோகஸ்தர்களிடம் எந்த இடத்திலும் சிலிண்டர் தட்டுப்பாடு (dry out) ஏற்படவில்லை என்று தெளிவுபடுத்தினார். வீட்டு உபயோகத்திற்கான எல்.பி.ஜி. உற்பத்தி முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதிக அளவில் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: கேஸ் சிலிண்டர் சப்ளை.. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு..!! அதிரடி காட்டிய மத்திய அரசு..!!
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு வணிக உபயோகத்திற்கான எல்.பி.ஜி.யில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் எல்.பி.ஜி.யை நம்பியுள்ள வணிக நுகர்வோருக்கு ஏற்படும் சிரமங்களைத் தீர்க்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார். குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) மற்றும் சி.என்.ஜி. வசதி உள்ள இடங்களில் அதைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தார். வீட்டு நுகர்வோருக்கு தடையின்றி எல்.பி.ஜி. வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது.

பொதுமக்கள் வதந்திகளை நம்பி பீதியடைந்து எல்.பி.ஜி. சிலிண்டர்களை முன்கூட்டியே அதிக அளவில் முன்பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சுஜாதா சர்மா வலியுறுத்தினார். இதுபோன்ற பீதி நடவடிக்கைகள் தேவையில்லை என்றும், விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் எரிசக்தி தேவைகளைப் பாதுகாக்க அரசு தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.இந்த அறிக்கை மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு நாளை அவசர ஆலோசனை!