தமிழக ரயில் நிலையங்களில் தமிழ் மொழியைப் பின்னுக்குத் தள்ளி, இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் விவகாரம் தற்போது அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து, தற்போது சிவகாசி ரயில் நிலையத்திலும் இந்தி மொழியில் பெயர்ப்பலகை மாற்றப்பட்டிருப்பதைக் கனிமொழி எம்.பி. அவர்கள் நோய்த்தொற்று என மிகக் கடுமையானச் சொற்களால் விமர்சித்துள்ளார்.

ஒன்றிய அரசு தமிழகத்தின் மீது திட்டமிட்டுத் திணிக்கும் இந்தி மொழி ஆக்கிரமிப்பு என்பது ஒரு கொடிய நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவி வருகிறது. இதனை உடனடியாகக் கட்டுப்படுத்தியாக வேண்டும். அண்மையில் சென்னை பூங்கா ரயில் நிலையப் பெயர்ப்பலகையில் தமிழின் அடையாளம் சிதைக்கப்பட்டதை நாம் கண்டோம். அதன் தொடர்ச்சியாக இப்போது சிவகாசி ரயில் நிலையத்திலும் தமிழைத் தள்ளிவிட்டு, இந்திக்கு முதலிடம் அளித்துப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. இது எவ்வகையிலும் தற்செயலான நிகழ்வு அல்ல; இது தமிழ் மண்ணின் மொழி உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் ஒரு மறைமுகக் கிருமி போன்றச் செயலாகும்.
இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு: தலைமையே முடிவெடுக்கும்! ராகுல் - கனிமொழி சந்திப்பை விமர்சித்த EPS-க்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
தென்னக ரயில்வேயின் இத்தகையப் போக்குத் தமிழ் மக்களின் சுயமரியாதையைக் காயப்படுத்துகிறது. தமிழே முன்னவள்! தமிழே மூத்தவள்! என நாம் முழங்கி வரும் வேளையில், நமது மண்ணிலேயே நமது மொழியை இரண்டாம் நிலைக்குத் தள்ளுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தித் திணிப்பு எனும் இந்தக் கிருமிப் பரவலைத் தடுக்கத் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு மொழிப் போருக்குத் தயாராக வேண்டியச் சூழலை ஒன்றிய அரசு உருவாக்கி விடக்கூடாது. உடனடியாகச் சிவகாசி உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தமிழுக்கு முதலிடம் அளிக்கும் வகையில் பெயர்ப்பலகைகளை மாற்றியமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காலில் விழுந்ததை என்ன சொல்வீர்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு ப.சிதம்பரம் பதிலடி!