மதுரை மாவட்டம் இளமனூரில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இரண்டு பேர் சரணடைந்தனர். இறந்த நபர் ஐடிஐ மாணவர் என்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மதுரை மாவட்டம் இளமனூர் அருகே உள்ள கண்மாய் கரையில் பகுதி எரிந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய நிலையில் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் அருகே ரத்தக்கரை படிந்த கல் ஒன்று கிடந்துள்ளது. இதனை எடுத்து பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரை தலையில் கல்லை போட்டுக் கொன்றுவிட்டு தீ வைத்து எரித்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் தொடர் விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சுதந்திர நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகன் பிரசன்னா என்பது தெரியவந்தது. அவர் ஐடிஐயில் படித்து வந்துள்ளார். சடலம் அருகே கிடந்த சட்டையின் ஒரு பகுதி மற்றும் விரல்கள், செருப்பு ஆகியவற்றை அடையாளமாக வைத்து, இறந்தது பிரசன்னா என்பதை அவரது பெற்றோர் உறுதி செய்து போலீசாரிடம் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக இராமர், அபினேஷ் ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பிரசன்னாவின் பிரேத பரிசோதனை முடிந்து உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரசன்னாவின் வீடு அமைந்துள்ள ஒத்தக்கடை சாலையில் உறவினர்கள் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: நண்பா.. நண்பீஸ் இனி வரலாறு பேசும்..! தவெக 2வது மாநாடு அறிவிப்பை பகிர்ந்த விஜய்..!
இதையும் படிங்க: கடலலையாய் முருக பக்தர்கள் மாநாட்டில் திரண்ட மக்கள்.. தமிழ்நாட்டில் பாஜவுக்கான எழுச்சி இது..!!