இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) 2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமான "பாரதிய அந்தரிக்ஷ் ஸ்டேஷன்" (BAS) ஐ உருவாக்கும் என இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, இந்தியாவின் விண்வெளித் துறையில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய டாக்டர் நாராயணன், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். 2035-க்குள் முழு விண்வெளி நிலையம் செயல்பாட்டுக்கு வரும் எனவும் இது ஐந்து தொகுதி கட்டுமானமாக இருக்கும், முதல் தொகுதி 2028க்குள் விண்வெளி சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்படும் எனவும் உறுதியாக தெரிவித்தார். இந்த விண்வெளி நிலையம் 52 டன் எடை கொண்டதாகவும், புவியிலிருந்து 400 கி.மீ உயரத்தில் சுற்றுப்பாதையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Moon Mission 2035! சீனா உதவியுடன் நிலாவுக்கு செல்ல பாக்,. ஆர்வம்!!
இந்தத் திட்டம், இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் (Gaganyaan) மிஷனுடன் இணைந்து செயல்படுத்தப்படும். 2027-ல் ககன்யான் மிஷன் மூலம் இந்திய விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், 2040-க்குள் நிலவில் இந்திய விண்வெளி வீரரை தரையிறக்கி பாதுகாப்பாக திருப்பி அழைத்து வருவதற்கான திட்டங்களும் தயாராகி வருவதாகவும் நாராயணன் தெரிவித்தார்.
மேலும், இஸ்ரோவின் பிற முக்கிய முன்னேற்றங்களாக, சந்திரயான்-3 மிஷன் மூலம் நிலவின் தென் துருவத்தில் மென்மையான தரையிறக்கம், ஆதித்யா-எல்1 மிஷன் மூலம் சூரிய ஆய்வு மற்றும் வெற்றிகரமான விண்கல இணைப்பு (docking) பரிசோதனைகளை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய விண்வெளித் துறையில் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்களிப்பதாகவும், 2047-க்குள் இந்தியா உலகளாவிய விண்வெளி சக்தியாக உருவெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு, பிரதமர் நரேந்திர மோடியின் "விக்ஷித் பாரத்" தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போவதாக அமைந்துள்ளது. இந்தியாவின் விண்வெளி நிலையம் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு முக்கிய தளமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இஸ்ரோ தலைவர் முனைவர் நாராயணனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் டாக்டர் ஆ.பெ.ஜே. அப்துல் கலாம் விருதை வழங்கினார். இந்த விருது, ஸ்பேடெக்ஸ் (SpaDeX) மற்றும் நிசார் (NISAR) பயணங்களின் வெற்றிக்காகவும், “ஆபரேஷன் சிந்தூர்” இல் இஸ்ரோவின் முக்கியமான விண்வெளி அமைப்பு ஆதரவுக்காகவும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிசார் சேட்டிலைட்; இஸ்ரோவுக்கு பார்லிமென்டில் பாராட்டு! லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் பெருமிதம்..!