கடந்த நான்கு நாட்களாக நாடு முழுவதும் விமான சேவைகளைத் தாண்டிய இடையூறுகளால் பாதிக்கப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ், இன்று அதிகாலை முதல் சென்னை விமான நிலையத்தில் தனது பயணிகள் விமானங்களை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது.
புதிய பணி நேர வரம்பு விதிமுறைகள் (FDTL) அறிமுகப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட விமானிகள் மற்றும் குழு பணியாளர்கள் பற்றாக்குறையால் ஏற்பட்ட இந்த அவல நிலை, அரசின் தலையீடு மற்றும் இண்டிகோவின் உதவி நடவடிக்கைக்களால் சற்று தணிந்துள்ளது. இருப்பினும், அனைத்து விமானங்களும் இயங்கத் தொடங்கவில்லை. இன்று மட்டும் சென்னையில் 48 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை முதல் 10 விமானங்கள் புறப்பட்டு, புனே, அமதாபாத், கோயம்புத்தூர், குவாஹாத்தி, கொல்கத்தா, புவனேஸ்வர், ஜெய்ப்பூர் மற்றும் கொச்சி ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்டன. நேற்று சென்னை விமான நிலையத்தின் டெர்மினல் 1-இல் இருந்து இண்டிகோவின் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. அன்று மட்டும் 166 விமானங்கள் ரத்தாகின, 56 விமானங்கள் தாமதமடைந்தன. இதனால், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் செய்ய விரும்பிய ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர்.
இதையும் படிங்க: இண்டிகோ விமான சேவை நெருக்கடி எதிரொலி..!! புதிய விதிகளை திரும்பப் பெற்றது DGCA..!!
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, நாட்டின் உள்நாட்டு விமான போக்குவரத்தின் 65 சதவீதத்தை கையாள்கிறது. தினசரி 2,300 விமானங்களை இயக்கும் இந்நிறுவனம், கடந்த நான்கு நாட்களில் 2,000-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளது. இதன் விளைவாக, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் குழப்பம் நிலவியது.
மேலும் இதனால் பிற ஏர்லைன்ஸ் விமான டிக்கெட் விலைகள் வானியில் பறந்தன, சென்னையிலிருந்து மும்பைக்கு 5,000 ரூபாய் இருந்த விலை 29,000 ரூபாயாக உயர்ந்தது; டெல்லிக்கு 20,000 முதல் 72,000 ரூபாய் வரை இருந்தது. அரசு இதற்கு உடனடியாக தலையிட்டது.
விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), இண்டிகோவுக்கு இரவு பணி வரம்பு விதிகளில் டிசம்பர் 10 வரை விலக்கு அளித்தது. மேலும், இந்நிறுவனத்தின் செயல்பாடுகளில் உயர் ஸ்தர குழு விசாரணை நடத்த அறிவித்தது. இண்டிகோ தலைவர் பீட்டர் எல்பர்ஸ், "இது தற்காலிக சிக்கல். டிசம்பர் 10-15க்குள் இயல்புநிலை திரும்பும்," என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு ரீபுக்கிங், ஹோட்டல் தங்குமிடம், உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இந்த அவலத்தில் இந்திய ரயில்வேயும் உதவியை அளித்தது. தென்னிந்திய ரயில்வே, 18 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகளை இணைத்து, விமான பயணிகளை ரயில்களுக்கு மாற்றியது. ஸ்பைஸ்ஜெட் போன்ற பிற ஏர்லைன்ஸ்கள் 100 கூடுதல் விமானங்களை இயக்கி, பயணிகளுக்கு ஆதரவாக நின்றன.

இன்று சென்னை விமான நிலையத்தில் நிலவும் சூழல், நேற்றைய குழப்பத்தை விட சிறந்தது. இருப்பினும், பயணிகள் தங்கள் விமான நிலையை https://goindigo.in/check-flight-status.html என்ற இணையதளத்தில் சரிபார்த்து வர வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். இந்த சம்பவம், இந்திய விமானத் துறையின் உள்கட்டமைப்பு மற்றும் திட்டமிடலில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சசிகலா குறித்து எதிர்பாராமல் வந்த கேள்வி.. சட்டென எழுந்து நடையைக் கட்டிய செங்கோட்டையன்... பிரஸ்மீட்டில் பரபரப்பு...!