மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. கடைசியாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இவ்விழா, ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டியது. ஆனால் 2018ஆம் ஆண்டு வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தாமதமானது. இப்போது திருப்பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து, விழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. வடக்கு ஆடி வீதியில் யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு காலங்களில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 16ஆம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அடுத்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 7.55 மணிக்கு அம்மன் மூலஸ்தானத்திற்கும், 8.10 மணிக்கு சுந்தரேஸ்வரர் மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகம் செய்யப்படும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்டம்பர் 11 முதல் 16 வரை ஆறு நாட்களுக்கு மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழாவுக்குப் பிறகு மண்டல பூஜைகள் தொடரும்.கோயில் நிர்வாகம் பக்தர்களின் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. ஏழு லட்சம் பக்தர்கள் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு கருதி ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான விபத்து குழு காப்பீடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் முக அடையாள அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
புது மண்டபத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, கூட்ட நெரிசலை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதிகள், குடிநீர், மருத்துவ உதவி, வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவை தயார்நிலையில் உள்ளன. அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த விழா மதுரையை விழாக்கோலமாக்கியுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்து அருள் பெற ஆவலுடன் காத்திருக்கின்றனர்.