மேற்காசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஈரானில் இன்னும் தாக்க வேண்டிய இலக்குகள் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடன் மீண்டும் போர் ஏற்பட்டால் முந்தைய மோதலைவிட நீண்ட காலம் நீடிக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் அவ்வப்போது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்து வரும் சூழலில், ஈரானின் புரட்சிகர காவல் படை கடுமையான பதிலடி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

இதுகுறித்து அந்தப் படை வெளியிட்ட கருத்தில், போர் எப்போது முடிவுக்கு வர வேண்டும், எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் முடிவடைய வேண்டும் என்பதை அமெரிக்க அதிபர் மட்டும் தீர்மானிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த மோதலின் முடிவை அமெரிக்கா தன்னிச்சையாக நிர்ணயிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஈரானின் ராணுவ அதிகாரிகளும் புதிய தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். எதிர்தரப்புக்கு சேதத்தை ஏற்படுத்துவதற்கான களமாகவே போர்க்களம் இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இரு தரப்பிலிருந்தும் வெளியாகும் இத்தகைய எச்சரிக்கைகள் மேற்காசியப் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்துள்ளன.
இதையும் படிங்க: பிரிட்டனின் கடற்படை மற்றும் விமானப் படையை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தது ஈரான் அரசு!