நெல்லை இருட்டுக்கடை நிறுவனத்திற்கு நான் தான் உரிமையாளர் என மகன் வழிப்பேரன் சென்னையைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் சிங் என்பவர் வெளியிட்ட பொது அறிவிப்பிற்கு எதிராக தற்பொழுது நெல்லை இருட்டுக்கடை நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கக்கூடிய கவிதாசிங் தரப்பிலும் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தேவ்சிங் மகன் பிரேம் ஆனந்த் சிங் வெளியிட்ட அறிவிப்பு தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இருட்டுக்கடை ஸ்தாபனம் மற்றும் வேறு சில சொத்துக்கள் ஆதியில் ராம் சிங் என்பவருக்கு பாத்தியப்பட்டது என்றும் ராம்சிங் தான் இருட்டுக்கடையை ஆரம்பித்து நடத்தி வந்தார் என்றும் இருட்டுக்கடை என்பது ராம் சிங்கின் குடும்பத்தினர் அனைவருக்கும் பாத்தியப்பட்ட ஸ்தாபனம் என்பது முற்றிலும் தவறானது.

ராம் சிங்கிற்கு உதயசிங் மற்றும் 3 மகன்களும் 2 பெண் மகள்களும் வாரிசுகள். பாலாஜி சிங் பேரன் பிரேம் ஆனந்த் சிங். பாலாஜி சிங்கின் மகன் ஹரிசிங் ஆகிய இருவரும் வாதிகளாக இருந்து நெல்லை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முன்பு சுலோச்சனா பாய் என்பவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்த சிக்கலில் இருட்டுக்கடை... உரிமை கோரும் சகோதரர்..!
இந்த வழக்கின் வாதிகளுக்கு அனுகூலமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அசல் வழக்கு தீர்ப்பை எதிர்த்து சுலோச்சனா பாய் நெல்லை சார்பு நீதிமன்றம் முன்பு மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தார். மேல்முறையீட்டு வழக்கில் இரு தரப்பு வாதுரைகளையும் கேட்கப்பட்டு மேல்முறையீட்டு வழக்கு அனுமதிக்கப்பட்டு அசல் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.

சுலோச்சனா பாய் தான் இருட்டுக்கடை மற்றும் அதன் சொத்துக்களுக்கு பரிபூரண உரிமையாளர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் சுலோச்சனா பாய் கடையின் முழு உரிமையாளர் என்ற நிலைமையில் இருட்டுக்கடை வியாபார உரிமையை மாற்றம் செய்ய அதிகாரம் உள்ளது பிரேம் ஆனந்த் சிங் மற்றும் ஹரிசிங் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதை எதிர்த்து இரண்டாவது மேல்முறையீடு தாக்கல் செய்யப்படவில்லை. இருட்டு கடையை கிருஷ்ணா சிங் தொடங்கி அவரே நடத்தி வந்தார். அவரது ஆய்வுக்குப் பின் கிருஷ்ணா சிங் மகன் பிஜிலி சிங் அவருடைய மனைவி சுலோச்சனா பாய் இருவரும் நடத்தி வந்து பிஜிலிசிங் காலத்திற்குப் பிறகு சுலோச்சனா பாய் இருட்டுக்கடையை நடத்தி வந்தார்.

சுலோச்சனா பாய்க்கு வயதான பின்பு 2020ல் இருட்டுக்கடை பொறுப்பை கவிதா சிங் தொடர்ந்து நடத்தி வந்தார். அதன் பின்பு 2022 ஏப்ரல் மாதத்தில் கவிதா சிங் பெயருக்கு சுலோச்சனா பாய் உரிமை மாற்றம் செய்து கொடுத்துவிட்டார்.
சுலோச்சனா பாய் காலமான பின்பு இறுதிச் சடங்குகள் அனைத்தும் கவிதா சிங்கும் அவரது கணவரும் சேர்ந்து செய்தார்கள். இருட்டுக்கடை ஸ்தாபனத்திற்கும் பிரேம் ஆனந்த் சிங்கிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.என கூறிய பின்பும் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை மறைத்து வெளியிடப்பட்ட பொது அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானதாகும்.
எனவே கவிதாசிங் தரப்பில் பிரேம் ஆனந்த் சிங்கிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.பிரேம் ஆனந்த் சிங் வெளியிட்ட அறிவிப்பு கவிதா சிங்கிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது அதை யாரும் நம்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்த சிக்கலில் இருட்டுக்கடை... உரிமை கோரும் சகோதரர்..!