பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதைத்தொடா்ந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தானும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. பின்னா் அமெரிக்கா தலையீட்டின்பேரில் மே 10 ஆம் தேதி முதல் இருநாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன. இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ பயங்கரவாதத்துக்கு எதிரான நமது கொள்கைகளை நட்பு நாடுகளுக்கு கட்சி பாகுபாடின்றி எடுத்துரைக்கவுள்ளோம். இதற்காக பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களும் அதற்கான தலைவா்களும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டுக்காக குரல் கொடுப்பவா்களை மிகவும் கவனமாக அரசு தோ்வு செய்துள்ளது’ என குறிப்பிட்டாா்.
இதையும் படிங்க: மோடியா? ராகுல்காந்தியா? பாக்., விருது யாருக்கு? மாறி மாறி அடித்துக் கொள்ளும் காங்., - பாஜ!

பாஜக எம்.பி.க்கள் ரவி சங்கா் பிரசாத், வைஜயந்த் பாண்டா, ஐக்கிய ஜனதா தள எம்.பி.சஞ்சய் ஜா, சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி.ஸ்ரீகாந்த் ஷிண்டே, காங்கிரஸ் எம்.பி.சசி தரூா், திமுக எம்.பி.கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி.சுப்ரியா சுலே ஆகிய 7 போ் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 6 முதல் 7 எம்.பி.க்கள் வரை இடம்பெறுவா் எனவும் அந்தக் குழுக்கள் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகளுக்கும் பயணிக்கவுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா உள்ளதால் அந்நாட்டுக்கு இந்தக் குழு பயணிக்காது என்று கூறப்படுகிறது. அதன்படி, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி எம்பி தலைமையில், ஒரு குழு வெளிநாடுகளுக்கு செல்கிறது. அதற்காக கனிமொழி எம்பி, நேற்றிரவு 9 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை திமுக மகளிர் அணி சார்பில் பூங்கொத்து கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

அப்போது கனிமொழி எம்பி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியா பாகிஸ்தான் இடையே, நடைபெற்ற பிரச்சனைகள் தொடர்பாக, நமது நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துக் கூற ஒரு வாய்ப்பாகவும், தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் பேசுவதற்கும், தீவிரவாத செயல்களால் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பற்றி கூறுவதற்கும், இந்திய அரசு, பல நாடுகளுக்கு நமது நாட்டின் பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறது. ரஷ்யா, ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கிறோம். இதற்கு இந்திய அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: பால்கனியில நிக்காதீங்க.. வீட்டை விட்டு வெளியே வராதீங்க..! வான்வழி தாக்குதலுக்கு தயாராகும் ராணுவம்..!