சென்னை: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகப் பதிவான வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 20-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், நீதிபதி “எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒருவர் இப்படிப் பேசலாமா?” எனக் கேள்வி எழுப்பி மனுவைத் தள்ளுபடி செய்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்ட 90 நிமிடங்களுக்குள் அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ் நாட்டுக்கும் வாஷிங்மிஷின் வந்துடுச்சாமே..? அப்படியா..? கலாய்த்த கனிமொழி..!
இந்தக் கைது நடவடிக்கைக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார். “முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு ஒருபோதும் தி.மு.க. அடிபணியாது” என அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தரப்பில் இது அரசியல் பழிவாங்கல் எனக் குற்றம் சாட்டப்படுகிறது. அதேசமயம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆளும் தரப்பு வாதிடுகிறது.
அனிதா ராதாகிருஷ்ணன் மீதான கைது மற்றும் அதைத் தொடர்ந்து கனிமொழியின் கண்டனம் ஆகியவை எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு வழிவகுக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: சட்டமன்றம் எப்படி இருக்கனும் தெரியுமா?... சி.எம். விஜய்க்கு வகுப்பெடுத்த திமுக எம்.பி. கனிமொழி...!