கர்நாடக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களில் முதலமைச்சர் மாற்றப்படுவார் என கர்நாடக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா சமீபத்தில் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் முதலமைச்சராக பதவி ஏற்கலாம் என தகவல் வெளியானது.

இந்த சூழலில் கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் முதல்வர் பதவி மாற்றம் குறித்த விவாதங்களைத் தணிக்கவும், கட்சி ஒற்றுமையை வலுப்படுத்தவும் மூன்று நாள் பயணமாக பெங்களூருக்கு வருகை தந்தார். கடந்த ஜூன் 30ம் தேதி முதல், சுர்ஜேவாலா கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் தனித்தனியாக சந்திப்பு நடத்தினார். இந்தச் சந்திப்புகள், கட்சியின் உள் அமைப்பு, ஆட்சியின் செயல்பாடு, மற்றும் காங்கிரஸின் உத்தரவாதத் திட்டங்களின் (guarantee schemes) நிலை குறித்து மதிப்பீடு செய்யும் நோக்கத்துடன் நடைபெற்றன.
இதையும் படிங்க: 11 பேர் பலிக்கு பதவி வெறிதான் காரணம்.. சித்தராமைய்யா, சிவக்குமாருக்கு எதிராக போர்க்கொடி!!
சித்தராமையாவிற்கும் டி.கே. சிவக்குமாருக்கும் இடையே முதல்வர் பதவி தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான தகவல்களை சுர்ஜேவாலா மறுத்தார். மேலும் “முதல்வர் மாற்றம் குறித்த எந்த விவாதமும் இல்லை. இது ஊடகங்களின் கற்பனையே,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

சில எம்எல்ஏக்கள், குறிப்பாக ஆலந்து எம்எல்ஏ பி.ஆர். பாட்டீல் மற்றும் காக்வாட் எம்எல்ஏ ராஜு காகே, வீட்டுவசதித்துறையில் ஊழல் மற்றும் நிதி ஒதுக்கீட்டில் தாமதம் உள்ளிட்ட பிரச்னைகளைப் பகிரங்கமாக எழுப்பியிருந்தனர். அவர்களுடன் சுர்ஜேவாலா தனிப்பட்ட முறையில் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
காங்கிரஸ் மேலிட ஒப்பந்தப்படி சித்தராமையா 2½ ஆண்டுகளும், டி.கே.சிவக்குமார் 2½ ஆண்டுகளும் முதலமைச்சர் பதவி வகிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சித்தராமையாவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் டி.கே.சிவக்குமார் முதலமைச்சர் ஆவார் என அவரது ஆதரவாளர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா எம்.பி., எம்.எல்.ஏ.க் களை சந்தித்து பேசி வருவது, முதலமைச்சர் மாற்றத்திற்காக தான் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுர்ஜேவாலாவின் அறிக்கையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் முதல்வர் மாற்றம் உள்ளிட்ட முடிவுகள் கட்சி மேலிடத்தின் கையில் உள்ளது என்றும் கூறினார்.
கர்நாடகாவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இதுகுறித்து பேசியுள்ள துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார், சித்தராமையாவே நமது முதல்வர். கட்சிக்குள் முதல்வர் மாற்றம் குறித்து எந்தப் பிரச்னையும் இல்லை. கட்சி ஒழுக்கம் முக்கியம், இதுபோன்ற விவாதங்களுக்கு இடமில்லை,” என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், ஒழுக்கமின்மை காட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த சிவக்குமார், பதவியை நோக்கி யாரும் அவசரத்தில் இல்லை. வரும் 2028-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல் தான் எங்களுக்கு முக்கியம். நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்" என்றார். வொக்கலிகா சமூகத் தலைவர்களின் கோரிக்கைகள் இருந்தபோதிலும், சிவக்குமார் கட்சி ஒற்றுமையை வலியுறுத்தி, சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

சிவக்குமாரின் விளக்கம் மற்றும் சுர்ஜேவாலாவின் மறுப்பு ஆகியவை, தற்போதைக்கு சித்தராமையாவின் தலைமையை உறுதிப்படுத்தினாலும், 2028 தேர்தலுக்கு முன் கட்சிக்குள் மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் கர்நாடக அரசியல் களத்தில் என்ன நடக்கப்போகிறது என்று..!!
இதையும் படிங்க: திணறடித்த கூட்ட நெரிசல்... மகிழ்ச்சி இழக்க வைத்த சோகம்... சித்தராமையா வேதனை!