கேரளாவில் அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான மூளை தொற்று நோயான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis - PAM) காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொற்று நெக்லீரியா ஃபவுலரி (Naegleria fowleri) என்ற "மூளையைத் தின்னும் அமீபா" எனப்படும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இது மாசுபட்ட நீர்நிலைகளில் காணப்படுகிறது.

இந்த ஆண்டு கேரளாவில் 42 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், கோழிக்கோடு மாவட்டத்தின் தாமரசேரியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, ஓமசேரியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தை மற்றும் மலப்புரம் மாவட்டத்தின் கண்ணமங்கலத்தைச் சேர்ந்த 53 வயது ரம்லா ஆகியோர் இந்நோயால் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: ஆக்ரோஷமான கோவில் யானை.. பாகன் உயிரிழந்த பரிதாபம்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!!
சிறுமி அருகிலுள்ள குளத்தில் குளித்தபோது தொற்று ஏற்பட்டதாகவும், குழந்தை கிணற்று நீரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ரம்லா, ஜூலை 8-ம் தேதி அறிகுறிகள் தோன்றிய பின்னர், ஆகஸ்ட் 4-ம் தேதி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு மாதம் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்தார்.
இந்நோய் மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து, மூளையைத் தாக்கி, 97% உயிரிழப்பு விகிதத்துடன் விரைவாக மோசமடைகிறது. இருப்பினும், கேரளாவில் ஆரம்பகட்ட கண்டறிதல் மற்றும் மில்டெஃபோசைன் உள்ளிட்ட ஐந்து மருந்துகளின் கலவையால் உயிரிழப்பு விகிதம் 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசின் சிறப்பு சிகிச்சை நெறிமுறைகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உதவியாக இருந்தன.
நோய் பரவலைத் தடுக்க, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் கிணறுகள் மற்றும் நீர் தேக்கங்களில் குளோரினேஷன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாசுபட்ட நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்கவும், மூக்கில் நீர் நுழையாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. "நீர் தான் வாழ்க்கை" என்ற பிரச்சாரத்தின் மூலம், நீர் ஆதாரங்களை சுத்தமாக வைத்திருக்கவும், கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள குளங்கள், நட்சத்திர ஹோட்டல்களின் நீச்சல் குளங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீச்சல் குளங்களில் தண்ணீரை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றி, குளோரின் பவுடர் சேர்த்து சுத்திகரிக்க வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு கட்டாய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மாசடைந்த நீர்நிலைகளில் குழந்தைகள் விளையாடுவதைத் தவிர்க்க பெற்றோர்கள் எச்சரிக்கப்படுகின்றனர். மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதால், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: நடிகை கொடுத்த பாலியல் புகார்!! பாலக்காடு காங்., எம்.எல்.ஏ ராகுல் சஸ்பெண்ட்.!