முதலமைச்சரின் விரைவான நடவடிக்கைகளை தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.கூட போகும் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதல் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி திட்டங்கள் பற்றிய விவாதம் நடந்திருப்பதை வரவேற்கின்றோம். ஆனால் அமைச்சரவை கூட்டம் முடிந்தவுடன் மகிழ்ச்சியான ஒரு சில அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்த்திருந்த மக்கள் ஏமாந்து போனார்கள். விவசாயிகள் கடன் தள்ளுபடி பற்றிய மறு அறிவிப்புக்கு விவசாயிகள் போராட்டக் களத்தில் காத்திருக்கிறார்கள். இப்போதைக்கு தேர்தல் வாக்குறுதி படி அறிவிப்புகள் வருமா அல்லது வராதா என்பதையாவது அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ்நாட்டோடு தேர்தல் நடந்து முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைத்த கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் அரசுகள் வேகமாக செயல்படுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். கேரளாவில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. மேற்கு வங்காளத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் மாநில முழுவதும் பயணிக்கின்ற திட்டம் செயல் படுத்தப்பட்டு விட்டது. அதே மேற்கு வங்காளத்தில் மகளிர்க்கு மாதம் 3000 ரூபாய் வழங்கும் திட்டம் இந்த மாதத்தில் இருந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாடு அரசும் இப்படி வேகமாக செயல்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பதிலே ஆச்சரியம் இல்லை.
இதையும் படிங்க: புது கூட்டணிக்கு தலைமை யாரு?... குண்டைத் தூக்கிப்போட்ட ஜவாஹிருல்லா... விஜய் பெயரைச் சொல்லி விளாசல்...!
விரைவில் கூடுகின்ற தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படக்கூடிய ஆளுநர் உரை தயாரிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்று நம்புகிறோம். ஆளுநர் உரையிலே மக்கள் எதிர்பார்க்கின்ற பல சமூக நலத்திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் விவகாரம், நீதிமன்றம் விளக்கம் கேட்டிருக்கின்ற திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம், மத்திய அரசு அழுத்தம் கொடுக்கின்ற பி எம் ஶ்ரீ கல்வி திட்டம் விவாகரம், மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் நிர்மானிக்கும் விவகாரம், லஞ்சம் இல்லாத நேர்மையான ஆட்சிக்கான முன்னெடுப்புகள், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெடுப்புகள், கட்டுக்கடங்காமல் இருக்கின்ற போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள், மத்திய அரசிடம் இருந்து திட்டங்களுக்கு நிதி பெறுவதற்கான முயற்சிகள், புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வெகுவாக குறைக்கப்பட்ட நிதியை திரும்ப பெறுவதற்கான முயற்சிகள், நிலையான ஆட்சியை கொடுத்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கின்ற கொள்கை முடிவுகள், தமிழகத்தில் அனைத்து கட்சிகள் வலியுறுத்துகின்ற சாதி, சமூக நீதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய அறிவிப்புகள், மின்வெட்டை போக்குவதற்கான முன்னெடுப்புகள், பரந்தூர் விமான நிலையம் பற்றிய முடிவுகள் போன்றவற்றை ஆளுநர் உரையில் தமிழ்நாட்டு மக்களோடு சேர்ந்து நாங்களும் எதிர்பார்க்கின்றோம். ஐந்து ஆண்டுகளுக்கு புதிய அரசு எப்படி இயங்க போகின்ற பாதையை மக்கள் ஆளுநர் உரையின் மூலமாகத்தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது எனக்குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "717 டாஸ்மாக் கடைகள் உண்மையில் மூடப்பட்டதா...?" தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!