இந்தியாவின் மிக முக்கியமான அணுமின் உற்பத்தி மையங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வழங்கும் நிறுவனங்களின் விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஹேக்கர் குழு ஒன்று கூறியிருப்பது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே நேரத்தில், இந்தக் குற்றச்சாட்டை அணுமின் கழகமான NPCIL திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ரஷ்யாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், நான்கு புதிய அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் மின் உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் இந்த அணுமின் நிலையம் தேசிய பாதுகாப்பு நோக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், 'வேர்ல்டு லீக்ஸ்' என்ற ஹேக்கர் குழு, கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான சில ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தது. இதில் நிலையத்தின் வரைபடங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வழங்கும் நிறுவனங்களின் தகவல்கள் இருப்பதாக அந்த குழு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் வேகமாக பேசப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: கூடங்குளம் அணுமின் நிலைய ப்ளூ பிரிண்ட் லீக்…! இந்திய பாதுகாப்பு வட்டாரத்தில் பேரதிர்ச்சி..!!

ஆனால், இந்த தகவல்களை இந்திய அணுமின் கழகம் (NPCIL) மறுத்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான எந்த ரகசிய தகவலும் கசிந்ததாக கூறப்படுவது உண்மையல்ல என்றும், அணு உலைகளின் பாதுகாப்பு அமைப்புகள் அல்லது தேசிய பாதுகாப்பை பாதிக்கும் தகவல்கள் எதுவும் வெளியேறவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மூத்த அணுசக்தி விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், வெளியானதாக கூறப்படும் தகவல்களுக்கும் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்றும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார். NPCIL நிர்வாக இயக்குநர் ராஜேஷும், அணு பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்கள் எதுவும் திருடப்படவில்லை என்றும், முக்கிய பாதுகாப்பு தரவுகள் கசிந்ததாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும் உறுதிபட தெரிவித்தார்.
ஹேக்கர் குழுவின் குற்றச்சாட்டு மற்றும் NPCIL-ன் மறுப்பு காரணமாக இந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ விசாரணை மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளின் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: சீன செயலியால் காத்திருக்கும் ஆபத்து!! உஷரான இந்தியா! கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு திடீர் உத்தரவு