பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா, தனது குடும்பத்தால் கடும் அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், செருப்பால் அடிக்க முயன்றதாகவும், இறுதியில் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறி அனாதையாக்கப்பட்டதாகவும் பரபரப்பு பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தந்தைக்கு தானே சிறுநீரகம் தானம் செய்ததை வைத்து அவதூறு பேசப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி படுதோல்வி அடைந்த நிலையில், ரோஹிணி ஆச்சார்யா கடந்த நவம்பர் 15-ம் தேதி அரசியலில் இருந்தும் குடும்பத்தில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து நேற்று அவர் வெளியிட்ட உருக்கமான பதிவில், “நேற்று முன்தினம் என் வீட்டில் உள்ளவர்களால் மோசமான சொற்களால் வசைபாடப்பட்டேன். செருப்பால் அடிக்கவும் முயற்சி நடந்தது. நான் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கவில்லை. உண்மையை விட்டுக்கொடுக்கவில்லை. அதனால் அவமானத்தைத் தாங்க வேண்டியிருந்தது. அழுதுகொண்டே பெற்றோர், சகோதரிகளை விட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நான் அனாதையாக்கப்பட்டேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: துணை முதல்வர் சிராக் பஸ்வான்?! ஜீரோ To ஹீரோ!! பீகாரை புரட்டிப்போட்ட இளம் புயல்!

மேலும் அவர், “என் தந்தையின் உடல்நிலை மோசமாக இருந்தபோது, என் சிறுநீரகத்தை தானமாக அளித்தேன். அதைக்கூட என் புகுந்த வீட்டிற்கு சொல்லவில்லை. ஆனால் அதை வைத்தே என் மீது அவதூறு பேசப்பட்டது. திருமணமான அனைத்து பெண்களுக்கும் ஒரு வேண்டுகோள்: உங்கள் பிறந்த வீட்டில் சகோதரர் இருக்கும்போது, தவறியும் உங்கள் தந்தையைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்காதீர்கள். சகோதரரின் சிறுநீரகத்தைத் தானம் செய்யச் சொல்லுங்கள். நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள். எந்த வீட்டிற்கும் ரோஹிணியைப் போன்ற மகள் அல்லது சகோதரி வேண்டாம்” என்று வேதனையுடன் எழுதியுள்ளார்.
ரோஹிணி ஆச்சார்யா, லாலு பிரசாத் யாதவிற்கு 2022-ல் சிங்கப்பூரில் சிறுநீரகம் தானம் செய்தவர். அப்போது இந்தியா முழுவதும் பாராட்டுகளைப் பெற்றார். ஆனால் தற்போது அதையே வைத்து குடும்பத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.ஜே.டி. தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தப் பதிலும் வெளியிடப்படவில்லை. ரோஹிணியின் சகோதரர்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரும் மௌனம் காத்து வருகின்றனர். பீகார் அரசியல் வட்டாரத்தில் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முடிந்தது தேர்தல்! களையெடுப்பில் இறங்கியது பாஜக! மாஜி மத்திய அமைச்சர் இடைநீக்கம்!