நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீட்டுக்கு எதிராகத் திராவிடர் கழகத்தினர் நடத்தத் திட்டமிட்டுள்ள இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணிக்கு அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தினர் நடத்தவிருந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து, திராவிடர் கழக துணைத்தலைவர் கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள குடிமக்களின் அடிப்படை உரிமை என்றும், சட்ட ஒழுங்கு விதிமீறல்கள் இல்லாத பட்சத்தில் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், பேரணி செல்லும் வழித்தடங்கள் மற்றும் பங்கேற்கும் வாகனங்கள் குறித்த விரிவான விவரங்களைத் தாக்கல் செய்யத் திராவிடர் கழகத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் ஆஜராகி விளக்கம் அளித்தார். நீட் தேர்வுக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது; மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட பேரணி வழித்தட விவரங்களின் அடிப்படையில், பேரணி கடந்து செல்லக்கூடிய அனைத்துப் பகுதி காவல் நிலையங்களிலும் உரிய பாதுகாப்புடன் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என அவர் உறுதி அளித்தார்.
அரசுத் தரப்பின் இந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன், திராவிடர் கழகத்தின் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கை முழுமையாக முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் மருத்துவ உரிமையில் கைவைப்பதா? சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பெ. சண்முகம் கோரிக்கை!