ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு உட்பட்ட மணிமுத்தாறு கால்வாய் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நெகிழிக் கழிவுகளை அகற்றித் தூர்வாரும் களப்பணியில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையைச் சேர்ந்த 100 தன்னார்வலர்களை ஈடுபடுத்தத் தயாராக இருப்பதாகத் தாக்கல் செய்யப்பட்ட வரைவு அறிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, அக்கட்சியின் ஆக்கப்பூர்வ முன்மொழிவுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
தொண்டி பகுதியில் பாய்ந்தோடும் மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு சட்டவிரோதக் கட்டடங்கள் கட்டப்பட்டதால், ஆற்றின் அகலமும் நீர் பாயும் திறனும் வெகுவாகச் சுருங்கிவிட்டதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஆற்றுப்படுகையில் பிளாஸ்டிக் கழிவுகள், திடக்கழிவுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் அடியோடு பாழாகி, நிலத்தடி நீர் வளமும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: விவசாய இலவச மின்சாரத்தில் தட்கல் முறை ரத்தாகுமா? ₹2,431 கோடி தணிக்கை குறித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

எனவே, வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை ஆவணங்களின் அடிப்படையில் கூட்டு அளவீடு நடத்தி மணிமுத்தாறு நீர்நிலையின் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்ய வேண்டும் என்றும், கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, நெகிழிக் கழிவுகளை முழுமையாகச் சுத்தப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார்.
இம்மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிமன்றம், மனுதாரரான நாம் தமிழர் கட்சியே முன்னின்று இந்த ஆற்றைத் தூர் வாரலாமே? எனக் கேள்வி எழுப்பி, அதற்கான விரிவான செயல் திட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான செயல் திட்ட அறிக்கையில், மணிமுத்தாறு கால்வாயைத் தூர்வாரிச் சுத்தப்படுத்தக் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையைச் சேர்ந்த 100 தன்னார்வலர்கள் நேரடியாகக் களமிறங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தன்னார்வலர்களின் பாதுகாப்பு உபகரணங்களான கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்காக முதற்கட்டமாக ரூ.2 லட்சத்தை அக்கட்சி நிர்வாகமே ஏற்கும் என்றும், ஒட்டுமொத்தப் பணிகளும் 8 கட்டங்களாகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எந்தவொரு தனியார் சொத்துகளையோ ஆக்கிரமிப்புகளையோ அகற்றும் அதிகாரத்தைத் தன்னார்வலர்கள் ஒருபோதும் கையில் எடுக்க மாட்டார்கள் என்றும், அனைத்துச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் அரசு அதிகாரிகளாலேயே முறைப்படி மேற்கொள்ளப்படும் எனவும் மனுதாரர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இந்த முன்மொழிவைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், நீர்நிலையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி தாமாக முன்வந்திருப்பதைப் பாராட்டி வரவேற்றனர். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கக் கால அவகாசம் வேண்டும் எனக் கோரினார்.
இதையடுத்துக் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், தற்போது நிலவி வரும் எல்நினோ பருவநிலை மாற்ற பாதிப்பால் நீர்நிலைகளில் நீர்மட்டம் பெருமளவில் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது; மழைப்பொழிவும் கணிசமாகக் குறைந்துள்ளதால் அரசு நிர்வாகம் நீர்நிலை பாதுகாப்பு விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி தாக்கல் செய்துள்ள தூர்வாரும் திட்ட அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: பழனி கோவில் நில மோசடி வழக்கு: சார் பதிவாளர் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!