கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டுகளில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி 2002இல் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் அவரது மனைவி மகன், மருமகள் மற்றும் சகோதரர் மீது தொடரப்பட்ட வழக்கில் 2007 ஆம் ஆண்டு அவர்களை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து 2013 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகைகள் விளக்கி வாதிடப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறை மறு ஆய்வு மனுவை ஏற்று அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவின் அடிப்படையில், துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக விசாரணையை துவங்கி, ஆறு மாதங்களில் முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் முகாம்... ஒரு நாள்ல ஒன்னும் ஆகிடாது! அமைச்சர் அலட்சிய பதில்...!

இந்த உத்தரவுகளைத் தொடர்ந்து, வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு இடையில், துரைமுருகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். செப்டம்பர் 22 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். தற்போது அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது ஏன் என காவல்துறை விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: எல்லாம் ரெடியா? எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது... ஆட்சியர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை...!