திருவண்ணாமலை மாவட்டம் கிளியாப்பட்டு பகுதியில், திருவண்ணாமலை - அவலூர்பேட்டை இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியினைத் தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று குத்துவிளக்கேற்றி, அடிக்கல் நாட்டி, கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மேடையில் உரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத் துறை சார்பாக வரும் 10 ஆண்டு காலத்தில் சுமார் 2,200 கிலோ மீட்டர் அளவிலான சாலைகளை அமைக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் குறித்துப் பேசிய அமைச்சர், திருவண்ணாமலை - திருக்கோவிலூர், திருவண்ணாமலை - நல்லவன்பாளையம் வழியாக அரூர் வரை செல்லும் சாலைகள், சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி சாலை எனப் பல மாவட்டச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மாற்றி அமைக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: அமித்ஷா பேச்சால் நேரு குடும்பமே குழம்பி போயிருக்கு! ராகுல்காந்தியை வச்சு செய்யும் பாஜக!
திருவண்ணாமலை - அவலூர்பேட்டை சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, முதல் கட்டமாக 2 கிலோமீட்டர் தூரம் வரை நான்கு வழிச் சாலைப் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. அதனையடுத்து, இன்று ரூ.64 கோடி மதிப்பீட்டில் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை, திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பணிகள் (84 கிலோ மீட்டர் நீளத்திற்கு) ரூ.770 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன என்றார். மேலும், நடப்பு நிதியாண்டில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இருவழித் தடங்களிலிருந்து நான்கு வழித் தடங்களாக அகலப்படுத்தும் 6 பணிகள் (37 கிலோ மீட்டர் நீளத்திற்கு) ரூ.240 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதாகவும் அறிக்கை அளித்தார்.
இதுபோன்று சாலைகளை மேம்படுத்துவதன் மூலமாக, பயண நேரம் மிகவும் குறையும், வணிகத் தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும். திருவண்ணாமலையில் விவசாய உற்பத்தி செய்கிற விளைபொருள்களை எளிதில் சந்தைக்குக் கொண்டு சென்று சந்தைப்படுத்த முடியும். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கிற வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திலேயே செல்ல முடியும். இதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்து விபத்துகளைக் குறைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், சாலை விரிவாக்கம் அருகாமையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைவாகச் செல்ல உதவும் என்றும் கூறி, இந்தச் சாலைக்கு ஆணை வழங்கிய முதலமைச்சருக்குத் நன்றியினைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவு!! பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் கைது! கடலோர காவல்படை அதிரடி!