இன்றைய முதல்வர் விஜய், வருங்கால பிரதமர் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது அமைச்சர் ஜெகதீஸ்வரி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். சிவகாசி அருகே ஆமத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அங்கிருந்த மாணவ, மாணவியர் மற்றும் வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்கள், இளம் பெண்கள் முன்னிலையில் சிறப்பு உரையாற்றினார்,
அப்போது, வரும் காலங்களில் வேலை தேடும் எந்த ஒரு காலகட்டத்திலும் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என மாணவ மாணவியரிடம் கேட்டுக் கொண்டார். ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்பவர் நமது முதல்வர். அதன் அடிப்படையில் பணம் கொடுத்து வேலை வாங்கும் சூழல் இனிமேல் வராது. அனைவருக்கும் கல்வி தகுதியின் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் உறுதியாக வேலைவாய்ப்புகளை முதல்வர் வழங்குவார் என தெரிவித்துள்ளார்.

ஊழல் இல்லாத மக்களுக்கான தவெக ஆட்சிக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் யாரும் ஒரு ரூபாய் கூட பணம் கொடுத்து வேலை வாங்கும் நிலை ஏற்படாது, அதையும் மீறி ஏதாவது தீய சக்திகள் பணம் கேட்டால் கொடுக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "ரத்தக்கண்ணீரில் தமிழகம்"..! 100 நாள் சாதனை..! முதல்வர் விஜய் மீது வானதி தாக்கு.!!
நமது அரசு பணம் கேட்காது, இளைஞர்கள், பெண்கள், மாணவ மாணவியர்களுக்கு தவெக அரசு முக்கியத்துவம் வழங்கும். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஊழல் இல்லாத அரசாக தவெக அரசு செயல்படுகிறது என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட இளம் சிறார்களுக்கு மாவட்ட ஆட்சியர் பல்வேறு முறைகளில் மறுவாழ்வு அளித்து அவர்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உள்ளதாக மேடையில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவை அமைச்சர் புகழாரம் சூட்டி பேசினார்.
வருங்காலத்தில் தவெக ஆட்சி மட்டுமே இருக்கும். இன்றைய முதல்வர் விஜய் வருங்கால பிரதமர், என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. நாம் அனைவரும் இணைந்து ஒவ்வொரு நொடியும் முதல்வர் விஜய் பிரதமர் என்பதை நோக்கியே பயணிப்போம் என்றார்.
இதையும் படிங்க: கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!