கிருஷ்ணகிரியில் 2,885 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சியை விட நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் நெல் கொள்முதல் அதிகம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கிருஷ்ணகிரியில் தான் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
ஊரகப்பகுதிகளை போல் நகரப் பகுதிகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது திமுக ஆட்சி தான் என்று கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் தான் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக முதலமைச்சர் கூறினார். ஓசூரில் எல் சி 104 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் கெலமங்கலத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும் எனவும் கூறினார்.
ஓசூரில் NH 44, 844 சாலைகளை இணைக்க புதிய சாலை அமைப்பும் சாத்திய கோழிகள் குறித்து ஆராயப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சிலர் பொய் கூறி வருவதாக தெரிவித்தார். வயிற்றெரிச்சல் பட்டு எதிர்க்கட்சிகள் பொய் பரப்பி வருவதாகவும், மலிவான அரசியலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: வாங்க வாங்க! கிருஷ்ணகிரி மண்ணில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு...

கொள்கையற்ற கூட்டத்தினர் என்று எதிர்க்கட்சியினரை சாடினார். நீட் விலக்குக்கு கடுமையான சட்ட போராட்டம் நடத்தினோம் என்றும் நீட் விலக்கு தற்போது நிறைவேற்ற முடியவில்லை, அதை நாங்கள் மறுக்கவில்லை எனவும் கூறினார். கொள்கையற்ற கூட்டத்தினர் மலிவாக அரசியல் செய்கின்றனர் எனவும் நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு சாதகமான அரசு அமைய போராடினோம், நிச்சயம் ஒரு நாள் நமது மாநிலத்துக்கான ஆட்சி அமையும் எனவும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என்ன என்றும் வாக்குறுதிகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி பட்டியலிட முடியுமா எனவும் கேட்டார். திமுக அரசின் திட்டங்களுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்து உள்ளதாகவும், ஈபிஎஸ் கையெழுத்திட்ட முதலீடுகள் செயல்பாட்டிற்கு வரவில்லை என்றும் தெற்கு ஆசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவேன் என்றும் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள்! திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்