நாகாலாந்து மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மூத்த தலைவருமான இல.கணேசன் (வயது 80), உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார். சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 8ம் தேதி அன்று கால் தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை 6:23 மணியளவில் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: இல.கணேசன் உடல் இன்று நல்லடக்கம்!! நாகாலாந்தில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!!
1945ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி தஞ்சாவூரில் பிறந்த இல.கணேசன், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்எஸ்எஸ்) தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பாஜகவில் மாநில செயலர், தேசிய துணைத் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்தவர்.
2021இல் மணிப்பூர் ஆளுநராகவும், 2022இல் மேற்கு வங்க ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பு) பணியாற்றினார். 2023 முதல் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார். தமிழ் ஆர்வலராகவும், பண்பாளராகவும் அறியப்பட்ட இல.கணேசன், மாற்றுக் கருத்துகளை மதித்து அனைவரிடமும் நட்பு பாராட்டியவர். அவரது மறைவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
மறைந்த இல. கணேசனின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி, சீமான், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று (சனிக்கிழமை) மாலை அவரது உடல், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறைந்த இல. கணேசனின் உடலுக்கு நாகலாந்து முதலமைச்சர் நைபியு ரியோ நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் துணை முதலமைச்சர்கள் யந்துங்கோ பாட்டன், டி.ஆர். ஜெலியாங், தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோர் இல.கணேசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். “நாகலாந்து மக்கள் இல.கணேசன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். அவரது எளிமையும், மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த பணிகளும் எப்போதும் நினைவுகூரப்படும்,” என ரியோ தெரிவித்தார்.
இதையும் படிங்க: மறைந்தார் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்.. முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி நேரில் அஞ்சலி..!!