தமிழ்நாட்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கணினி அறிவியல், தோட்டக்கலை மற்றும் வாழ்வியல் திறன் போன்ற பாடங்களை கற்பிக்க, 2012-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 16,500-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். மேலும் இவர்களின் பணி தற்காலிகமானது என்று அரசு அறிவித்திருந்தது. தற்போது, தமிழ்நாட்டில் சுமார் 12,000 முதல் 13,000 பகுதி நேர ஆசிரியர்கள், மாதம் 12,500 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருவதுடன், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதனை அடுத்து 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக, பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் 377-வது வாக்குறுதியாக, உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் 100 நாளில் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தது.

ஆனால் இதுவரை பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இந்த நிலையில், பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். இன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இன்றோடு தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆசிரியர்கள் தினம் கடந்துவிட்டன., பள்ளிக் கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றும் ஓவிய, இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்குத் தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண்-181 இன்றாவது தங்களுக்கு ஞாபகம் வருகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்... ரூ.13,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதல்வர் பெருமிதம்..!
ஆட்சிக்கு வருவதற்கு முன் ஆசிரியர்களின் பணிநிரந்தரக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் ஆசிரியர்கள் நலனை சாவகாசமாக மறந்து கிடப்பில் போட்டது ஏன் என்றும் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராடினால், ஏவல்துறையின் துணைகொண்டு அடக்குவதற்கு மட்டும் ஆர்வம் காட்டிய திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற ஆர்வம் காட்டாதது ஏன் எனவும் சரமாரி கேள்விகளை முன் வைத்தார். பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அலைக்கழித்து, அரசுப்பள்ளி மாணவர்களின் நலனையும் வதைக்கும் திமுக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடத்தைத் தமிழகம் கற்பிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கே களங்கம்... பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த திருமா... சாட்டையை சுழற்றுவாரா ஸ்டாலின்?