நாமக்கல் மாநகராட்சியின் 4-வது வார்டுக்கு உட்பட்ட சின்னமுதலைப்பட்டி பகுதியில், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட தண்ணீர் தேங்கிய குழியில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் ரோகித் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாமக்கல் மாநகராட்சியின் 39 வார்டுகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் குழி தோண்டப்பட்டிருந்தது.
குழி திறந்த நிலையில் இருந்ததும், அதனைச் சுற்றி எச்சரிக்கை அடையாளங்கள் அல்லது தடுப்புகள் இல்லாததும் இந்த விபத்துக்கு காரணமாக அமைந்ததாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிஞ்சுக் குழந்தைக்கு எமனாக அலட்சிய திமுக அரசு வந்ததாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். நாமக்கல் மாவட்டம் சின்ன முதலைப்பட்டியில், பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் மிகுந்த கண்டனத்திற்குரியது என கூறினார். திமுக அரசின் மெத்தனப்போக்கால் பச்சிளம் குழந்தையைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் சிறுவன் ரோகித்தின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பில் போங்காட்டம்... திமுக அரசை விளாசிய நயினார்...!
ஆட்சி முடிய மூன்று மாத காலம் மட்டுமே இருக்கும் வேளையில், கணக்கு காட்ட அவசரகதியில் செய்யும் வேலைகளிலும் அலட்சியம் காட்டி, உருப்படியாகச் செய்யாமல், வாழ வேண்டிய பச்சிளம் பிள்ளைகளின் உயிரைக் காவு வாங்குவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார். தனது அலட்சியப்போக்கால் கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது போதாதென்று, ஆட்சி முடியும் தருவாயில் குழந்தைகளின் உயிரையும் பறிக்கும் அரக்கனாக மாறிவரும் திமுக அரசை மீண்டுமொருமுறை அரியணை ஏற இனி என்றும் தமிழக மக்கள் விடமாட்டார்கள் என்றும் இது நிச்சயம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாவம் சும்மா விடாது...! புத்தாண்டில் தூய்மை பணியாளர்களை தவிக்க விட்ட ஸ்டாலின் அரசு... நயினார் கண்டனம்..!