தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய விஜய் பாஜகவை கடுமையாக விமர்சித்து இருந்தார். பாசிச ஆட்சி என்றும் பிரதமர் மோடியையும் சரமாரியாக சாடினார். இந்த நிலையில், விஜயின் பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தார். நெல்லையில் இன்று பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். மாநாடு நடைபெறும் இடத்தில் அதன் பணிகளை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய் நேற்று நடைபெற்ற மாநாட்டில் தங்களது கொள்கை எதிரியாக பாஜக என கூறியுள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்தார். பாஜக இந்தியா முழுவதும் 1652 எம்எல்ஏக்கள் 300க்கு மேலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி என்றும் உலகத்திலேயே மிகப்பெரிய தலைவர் பிரதமர் நரேந்திர மோடி எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே வாஜ்பாய் சிறப்பான ஆட்சியை ஆட்சி செய்தார் என்று கூறிய அவர் அன்புத்தம்பி விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார் என்றும் 2 மாநாடு நடத்தி முடித்த உடனேயே எங்களுடைய எதிரி பாஜக என்று சொன்னால் அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் எனவும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு! வாழ்த்துகளை பகிர்ந்து நெகிழ்ச்சி..!
அவர்கள் கொள்கை என்னவென்று சொல்லவில்லை என்று கூறிய நயினார் நாகேந்திரன், 5 தலைவர்களை காட்டி இதுதான் கொள்கை என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது என்று கேள்வி எழுப்பினார். பா.ஜ.க., அதிமுக அடிமை கூட்டணி என்று விஜய் விமர்சித்து உள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அதை நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும் எனவும் அதை நேரடியாக என்னிடம் யாராவது கூறினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
எதன் அடிப்படையில் பிரதமர் மோடியை பற்றி கூறுகிறார்கள் என தெரியவில்லை என்றும் பல வருடமாக சிங்கம், புலி போன்ற கதைகளை எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் என்றும் கூறினார். கட்சியை பலப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம் என்றும் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லையா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நயினார், நீங்கள் தான் கூறுகிறீர்கள் என்றும் நான் சொல்லக்கூடாது என்று கூறினார்.
இதையும் படிங்க: ராகுலுக்கு எத்தன தடவ சொல்றது? நீங்கலாச்சு பொறுப்பா நடந்துக்கங்க ஸ்டாலின்.. நயினார் விமர்சனம்..!