வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டதாகக் கூறி, வரும் ஜனவரி 27-ஆம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, வேலை நேரத்தை முறைப்படுத்துதல் மற்றும் ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. கடந்த மார்ச் மாதமே நடத்தப்பட வேண்டிய இந்தப் போராட்டம், அரசின் சமரசப் பேச்சுவார்த்தை மற்றும் உறுதிமொழிகளை ஏற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வேலைநிறுத்தத்தை அதிகாரிகள் கையில் எடுத்துள்ளது வங்கித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் நியாயமான கோரிக்கைகளை 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக கடந்த 2024-ஆம் ஆண்டு இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ.) எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் காகித அளவிலேயே நிற்கின்றன. மேலும், எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் பிடிவாதமான முடிவை எங்களால் ஒருபோதும் ஏற்க முடியாது" எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அரசின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து, வரும் 27-ஆம் தேதி வங்கிகள் இயங்காது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட போராட்டத்தை அரசின் மீதான நம்பிக்கையில் ஒத்திவைத்தோம், ஆனால் தற்போது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதே அதிகாரிகளின் குமுறலாக உள்ளது. இந்த ஒரு நாள் வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தங்களது பணப் பரிவர்த்தனைகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தங்களின் கோரிக்கைகளுக்குப் பிறகும் அரசு செவிசாய்க்காவிட்டால், போராட்டத்தை அடுத்தகட்டத்திற்குத் தீவிரப்படுத்தவும் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: குடியரசு தினத்துக்கு ஐரோப்பிய சிறப்பு விருந்தினர்கள்.. உர்சுலா மற்றும் அன்டோனியோ கோஸ்டா வருகை!
இதையும் படிங்க: கையெழுத்து போடு; நிதியைத் தருகிறோம்! மத்திய அரசு பிளாக்மெயில் செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்!