காத்மாண்டு: பெருவெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டிடமும் நேரடியாக நிதி இழப்பீடு கோரவில்லை என்று நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனால் விளக்கம் அளித்துள்ளார். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடராக இந்த சம்பவத்தை உலக நாடுகள் பார்க்க வேண்டும் என்பதே நேபாளத்தின் நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் நேபாளத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உயிரிழப்புகள், பொருட்சேதம் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உலக அளவில் கவனம் திரும்பியது. இதையடுத்து, பேரிடர் தொடர்பான இழப்பீட்டை இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் நேபாளம் கோரியதாக செய்திகள் வெளியாகின.
இந்த தகவலை நேபாள அரசு தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனால் கூறுகையில், தானோ அல்லது வெளியுறவு அமைச்சகமோ எந்தவொரு நாட்டிடமும் காலநிலை இழப்பீடு கேட்டு கோரிக்கை வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்: ரூ.24,250 கோடி இழப்பு! காத்திருக்கும் மிகப்பெரிய சவால்!
இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டிடமும் நேரடியாக நிதி இழப்பீடு கோரப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரை வெறும் இயற்கை பேரழிவாக மட்டும் பார்க்காமல், காலநிலை மாற்றத்தால் உலகம் சந்தித்து வரும் பாதிப்புகளின் ஒரு பகுதியாக கவனிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதையும், அதன் தாக்கமாக இயற்கை பேரிடர்களின் தன்மை மற்றும் தீவிரம் மாறி வருவதையும் நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் பேரிடர் ஏற்படும்போதும் காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்து சர்வதேச சமூகம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நேபாளத்தின் நாகரிகம், கலாசாரம் மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்க சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட அந்நாடு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக உலக நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், பெருவெள்ளத்துக்குப் பிறகு நேபாளத்தின் கவனம் நேரடி நிதி இழப்பீட்டை கோருவதில் இல்லை என்பதும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை சர்வதேச அளவில் எடுத்துரைத்து கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலேயே இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ளம்! 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்! சாதித்த மீட்புக் குழு!